இனவாதத்தீயை கக்கி அரசியலை செய்து கொண்டிருக்கின்ற கோத்தபாய அரசாங்கம் தேர்தல் வெற்றிக்காக இப்போது எமது தலைவர் றிஷாட் பதியுதீனை கைது செய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி எல்லைக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது இல்லத்தில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் நான்கு தமிழ் உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவு செய்யப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸிற்கோ, முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விற்கோ வாக்களித்து ஆசனம் கிடைக்காமல் போனால் ஒன்று இல்லையென்றால் பூச்சியம்.
கடந்த காலங்களில் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு வாக்களித்த அத்தனை இளைஞர்களும் தற்பொழுது இலாப நட்டக்கணக்குகளை மனதில் கை வைத்து பார்க்க வேண்டும் .
முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இடம்பெற்ற பர்மா இந்தியா போன்ற நாடுகளிலேயே முஸ்லிம் ஜனாஷாக்களை புதைக்க அனுமதி வழங்கியிருந்த போதும் இந்த நாட்டில் எரிக்கப்படுகின்ற அவல நிலை இருக்கும் போது அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என்று நமது சமூகம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதென்பது மிகவும் வேதனையான விடயம்.
பொறுப்பு மிக்க கல்குடாவின் குடிமகன் என்ற ரீதியில் ஒவ்வொருவரும் ஐந்து வருடத்திற்கான சத்தியத்தை பாதுகாக்க இருக்கின்ற நாற்பது நாட்களையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றார்.

