டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மூன்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னரேயே வழங்கப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த காசோலை அவரது பாதுகாப்பு அதிகாரிகளினால் மாற்றப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் இதன் தொகுப்பு நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
118 பேருக்கான பண உதவி தேர்தலுக்காகவே வழங்கப்பட்டது எனவும், தேர்தல் செலவுக்கு பொதுமக்களும், நிறுவனங்களும் பணம் வழங்குவது சாதாரண ஒரு நடவடிக்கை எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே இந்த உண்மை வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.