‘ஹனுமான் ‘படத்தின் மூலம் பான் இந்திய ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிராய்’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மிராய்’ எனும் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டமனேனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரா ஹரி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான ரசிகர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் காட்சி மொழியாக பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.