இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்டப் போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) மீண்டும் சம்பியனானது.
விமானப்படை அணிக்கு எதிராக கொழும்பு டொறிங்டன் சதுக்க மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (13) முற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் 2 ஆட்ட நேர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய ஹட்டன் நெஷனல் வங்கி 44 – 29 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.
இறுதிப் போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியை 18 – 9 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி, 2ஆவது ஆட்டநேர பகுதியையும் 10 – 2 என தனதாக்கி இடைவேளையின்போது 28 – 11 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டவண்ணம் இருந்தன. இதன் காரணமாக 3ஆவது ஆட்ட நேர பகுதியில் ஹட்டன் நெஷனல் வங்கியும் விமானப்படையும் 8 – 8 என சமநிலையில் இருந்தன.
கடைசி ஆட்ட நேர பகுதியில் சற்று திறமையை வெளிப்படுத்திய விமானப்படை அப் பகுதியை 10 – 8 என தனதாக்கிக்கொண்டது. ஆனால் ஒட்டுமொத்த நிலையில் ஹட்டன் நெஷனல் வங்கி 44 – 29 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைகத்துக்கொண்டது.
சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விசேட விருதுகள் அனைத்தையும் ஹட்டன் நெஷனல் வங்கி வீராங்கனைகள் வென்றெடுத்தது மற்றொரு சிறப்பம்சமாகும்.
சிறந்த மத்திய கள வீராங்கனையாக கயஞ்சலி அமரவன்ஷவும் சிறந்த கோல் போடும் வீராங்கனையாக உமங்கா டி சொய்சாவும், சிறந்த கோல் தடுத்தாடல் வீராங்கனையாக மல்மி ஹெட்டிஆராச்சியும் வலைபந்தாட்ட இராணியாக கயனி திசாநாயக்கவும் தெரிவாகினர்.
இதேவேளை, இறுதிப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற போட்டியில் இராணுவத்தை 66 – 52 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கடற்படை வெற்றிகொண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது.
டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பூரண அனுசரணை வழங்கியது.