தேசத்துரோக உடன்படிக்கை என அப்போது கூறப்பட்ட அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கை உட்பட சகல உடன்படிக்கைகளையும் ரத்து செய்யும் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த உடன்படிக்கையை செய்யக் கூடாது என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுப்பது எதிர்க் கட்சியின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்பாக இந்த உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது அமைந்திருந்தது.
இந்த நாட்டில் 69 லட்சம் பேர் நாம் நாட்டை பிரிப்பதாகவும், நாட்டை அழிப்பதாகவும் தேசத்துரோகி எனவும் கூறினர். ஆனால், தேர்தலின் பின்னர் இவர்கள் மௌமாக இருக்கின்றனர். தேர்தல் முடிவு வந்ததன் பின்னர் எம்.சீ.சீ. உடன்படிக்கை 70 வீதம் சிறந்ததாக அரசாங்கத்துக்கு மாறியுள்ளது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் இப்படிக் கூறுகின்றார்களோ தெரியாது.
சுதந்திர தினத்துக்கு முன்னர் இந்த உடன்படிக்கையை நீக்கிக் கொள்ளும் என எதிர்க்கின்றோம். அடுத்த வாரம் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு கொண்டுவாருங்கள். நாம் நீக்குவதற்கு ஆதரவு வழங்குவோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

