கண்டி, தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றதென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாத்தறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்-
“கண்டியில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது அரசாங்கத்தின் கவனயீனத்தால் ஏற்பட்டவையாகும். மோதலை தொடரும் தேவை அரசாங்கத்திற்கு காணப்பட்டது. அதாவது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதை தவிர்ப்பதற்கு இந்த மோதல் சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது.
அதனால்தான் இப்பிரச்சினையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு இத்தனை நாட்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினைகள் வாயிலாக மக்களை திசைதிருப்புவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.