மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று சியாரா லியோன். இந்த நாட்டின் ரிஜென்ட் பகுதியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் மலையடிவாரத்தில் வசித்த 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிஉள்ளனர்.
ரிஜென்ட் பகுதியானது மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. பலர் மலையிலும் வீடுகளை கட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் மலைப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் மிகப்பெரிய அளவிலான வெள்ளபெருக்கு மலையின் அடிவாரத்தை நோக்கி பாய்ந்துள்ளது.
நேற்று அதிகாலை நேரத்தை நெருங்கும் பொழுது ஒரே நேரத்தில் அடித்து வந்த பெரும் வெள்ளப்பெருக்கு, மலையில் கட்டியிருந்த மற்றும் அடிவாரத்தில் இருந்த வீடுகளை அடித்து கொண்டு சென்றது.
இரவில் ஆரம்பித்து அதிகாலை வரை மழை நீடித்ததினால் பெரும்பாலானோர் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இதில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதுவரை மண்ணில் இருந்து மீட்கப்பட்ட 200 பேரின் சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மண்ணில் புதைந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.