துருக்கியின் கரன்சியான லிரா நேற்று டாலருக்கு எதிராக 3.1 சதவீதத்தை இழந்தது.தேச துரோக புகாரின் பேரில் அமெரிக்க மத போதகரான ஆண்ட்ரூ பிரன்சன் துருக்கியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யுமாறு வாஷிங்டன் விடுத்த கோரிக்கைகளை துருக்கி அதிபர் எர்டோகன் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனால் துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இதைத்தொடர்ந்து துருக்கி கரன்சி லிரா தொடர்ந்து சரிந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று முதல் சந்தைகள் மீண்டும் துவங்கின. சந்தை துவங்கியது முதலே லிரா வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. டாலருக்கு எதிரான மதிப்பில் மூன்று சதவிகிதத்தை இழந்தது.கடந்த மாதம் டாலருக்கு எதிராக மதிப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு லிரா இழந்தது. நேற்றைய சந்தை முடிவில் டாலருக்கு எதிராக லிரா 6.2 ஆகவும், யூரோவிற்கு எதிராக 7.2 ஆகவும் இருந்தது. ஒரே நாளில் நாளில் 3.1 சதவீத இழப்பு ஏற்பட்டது.அதிபர் காரணம்சரிந்து வரும் லிராவின் மதிப்பை துாக்கி நிறுத்துவதற்காக வட்டி விகிதங்களை மாற்றி அமைக்க அந்த நாட்டின் மத்திய வங்கி திட்டமிட்டது. ஆனால் எர்டோகன் சம்மதிக்கவில்லை. இதனால் லிரா தொடர்ந்து சரிந்து வருகிறது. இதை தடுப்பதற்கு எந்த உருப்படியான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த நாட்டின் நிதித்துறை செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.உலக நாணய சந்தை ஆராய்ச்சிக்கு குழும தலைவர் ஜமீல் அகமது கூறும்போது, துருக்கி வர்த்தகர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். லிரா மட்டுமின்றி அசையா சொத்துக்களின் மதிப்பும் சரிந்து வருவது துருக்கி வர்த்தக உலகத்தை பதட்டத்தில் வைத்துள்ளது’ என்றார்.சந்தை கணிப்பு நிறுவனமான ஜே.பீ. மோர்கன், துருக்கி பொருளாதாரம் வரும் நிதியாண்டில் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சிபெறும் என தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாட்டை காப்பாற்ற எர்டோகன் மருமகனும் அந்நாட்டின் நிதியமைச்சருமான பெரட் அலபிராக் பாரீஸ் சென்றுள்ளார். அங்கு நிதியமைச்சர் பிரவுனோ லே மேயர் உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதனால் துருக்கி பொருளாதார சரிவு தடுத்து நிறுத்தப்படலாம் என்ற நம்பிக்கை அங்காராவில் எழுந்துள்ளது.

