தனியார்துறையில் இடம்பெறும் பாரிய இலஞ்ச, ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஏது வாக சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாசா ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பான சட்டத்தின் ஊடாக அரச துறையில் இடம்பெறும் மோசடிகளே தடுக்கப்படுகின்றன. தனியார் துறையில் இடம்பெறும் இலஞ்ச மோசடிகள் அரசாங்கத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. இவை குறித்து விசாரணை நடத்தவும் சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறினார்.
விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்த) சட்டமூலமானது நீதிச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதுடன், வழக்குகள் இரட்டிப்படைவதைத் தடுக்கும் என்றும் குறிப்பிட்டார். இதில் மேற்கொள்ளப்படும் திருத்தமானது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைச் சட்டம் மற்றும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை சட்டம் என்பவற்றை சமமான தளத்துக்குக் கொண்டுவந்துள்ளன என்றார்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது சாட்சிகள் வஞ்சிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. விசாரணை ஆணைக்குழு உறுதியான சாட்சிகளை வெளிப்படுத்தினாலும் பொலிஸார் தனியான விசாரணைகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைமையே காணப்படுகிறது. இதனால் வழக்குகள் இரட்டிப்படைகின்றன.இதனால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்படும். இதில் வித்தியாசம் என்னவெனில் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.