விபத்தில் துண்டான இளைஞனது காலை எடுத்து அவருக்கு தலையணையாக வைத்து மருத்துவம் பார்த்துள்ளது தனியார் மருத்துவமனை.
இந்தச் சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. ஜகான்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். அதில் அவரது கால் பலத்த சேதமடைந்தது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கால் மிகவும் சேதமான நிலையில் இருந்ததால் அதை மருத்துவர்கள் துண்டித்தனர். மருத்துவமனையில் உள்ள கட்டிலில் சிகிச்சைக்காக படுத்திருந்த இளைஞனின் தலைக்கு துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த நபர் ஒருவர், அதை அலைபேசியில் படம் பிடித்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந் தனர். மருத்துவமனையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.