தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்டோரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாவிடின் அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்று பொலிஸாருக்கு அறிவுறுத்தியது.
தீவகம் மண்கும்பானில் தனியார் காணியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுவதாக காணி உரிமையாளரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
எனினும் முறைப்பாட்டாளரால் குறிப்பிடப்பட்ட நபரைக் கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் முறைப்பாட்டாளர் சார்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுவோராக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எமது கட்சிக்காரரான முறைப்பாட்டாளரால் குற்றஞ்சாட்டுப்படுபவரும் ஊருக்குள் நடமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது” என்று மன்றுரைத்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான், சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுவோர், மணலைப் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபடுவோர் என அனைவரையும் கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக செயற்படுவோரை ஊர்காவற்றுறை பொலிஸாரால் தேடிக் கண்டுபிடிக்க முடியாவிடின் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்று அறிவித்தது.
இதேவேளை, சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபடுவோர், மணலை பதுக்கிவைத்து விற்பனை செய்வோரை கைது செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுக்கு அமைய சிலர் கைது செய்யப்பட்டனர். எனினும் ஊர் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

