தயாரிப்பு : பீப்பிள் மீடியா ஃபேக்டரி
நடிகர்கள் : பிரபாஸ், சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரீத்தி குமார், ஜரினா வஹாப், விடிவி கணேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : மாருதி
மதிப்பீடு : 2/5
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் கொமடி ஹாரர் திரில்லர் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் ‘தி ராஜா சாப்’ படத்தை காண பட மாளிகைக்கு சென்றனர். அவர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ராஜு ( பிரபாஸ்) தனது அம்மம்மா கங்கா தேவி ( ஜரீனா வஹாப்) மீது பாசத்துடன் இருக்கிறார்.பாட்டியான கங்காதேவி நினைவுத்திறன் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். நினைவுகளை இழந்தாலும் தன் கணவரும் , பேயோட்டுபவருமான கனகராஜு( சஞ்சய் தத்) வின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கிறார்.
அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தனது கணவர் கனகராஜூவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தனது அம்மம்மாவின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக தனது நண்பர் கொடுத்த சிறிய தடயம் மூலமாக அவருடைய வசிப்பிடத்திலிருந்து ஹைதராபாத் எனும் மாநகரத்திற்கு புறப்படுகிறார்.
ராஜுவின் தொடர் தேடலில் நகரத்திற்கு வெளியே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பங்களா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு அவருடைய தாத்தா கனகராஜு பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளை தெரிந்து கொள்கிறார். அது என்ன? என்பதும், அதன் பிறகு தன் பாட்டியின் ஆசையை பூர்த்தி செய்தாரா? இல்லையா? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
திகில் கதையாக இருந்தாலும் அதிலும் ஒரு உளவியல் வலிமை சார்ந்த ஒரு விடயத்தை இணைத்து திரைக்கதை அமைத்திருப்பது புதுமையாக இருந்தாலும், அதனை தெளிவாகவும்.. குழப்பம் இல்லாமல் சுருக்கமாகவும் … சொல்லாததால் பார்வையாளர்களுக்கு அயர்ச்சி ஏற்படுகிறது.
படத்தில் கதை நாயகனின் கதாபாத்திரமும், எதிர் நாயகனின் கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை. அதிலும் குறிப்பாக பாட்டி – பேரன் இடையேயான உணர்வுபூர்வமான காட்சிகள் ரசிகர்களிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
எதிர் நாயகனான கனகராஜூவின் கதாபாத்திரமும், அதற்கான நோக்கமும், அதன் திரை மொழியும் நேர்த்தியாக எழுதப்படாததால் ரசிகர்களை சோதிக்கிறது.
முதல் பாதியில் காதல் காட்சிகள்- பாடல் காட்சிகள்- சண்டை காட்சிகள்- ஆகியவை வலிந்து திணிக்கப்பட்டு இருப்பதால் ரசிகரகள் தங்களது இருக்கையிலேயே கைபேசியை பார்க்கத் தொடங்குகிறார்கள்.
இரண்டாம் பாதியில் வில்லன் கதாபாத்திரம் திரையில் தோன்றியவுடன் சுவாராசியம் எட்டிப் பார்த்தாலும்.. வழக்கமான திரை காட்சிகளால் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கும் காட்சிகளால் அங்கும் சோர்வு தான் ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் உளவியல் நிபுணர் கதாபாத்திரம் திரையில் தோன்றியதும் ஏதேனும் புதிய விடயங்கள் திரையில் தோன்றும் என எதிர்பார்த்தால் அவை மின்னி மறைந்து விடுகின்றன.
வில்னால் நாயகனும், அவனது நண்பர்களும் திகில் பங்களாவில் சிக்கிக் கொண்டாலும் அவர்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் வழக்கமான அக்மார்க் சினிமா தனமான மசாலா என்பதால் ரசிகர்களின் எரிச்சல் மேலும் அதிகமாகிறது.
ராஜுவை சிறிய வயதில் இருந்து காதலிக்கும் அனிதா ( ரீத்தி குமார்) ராஜூ பார்த்தவுடன் காதலிக்கும் பெஸ்ஸி( நிதி அகர்வால் ) ராஜுவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்கும் பைரவி ( மாளவிகா மோகனன்) என மூன்று பெண்கள் இருந்தாலும் அவர்கள் கவர்ச்சி பொம்மைகளாக மட்டுமே பாவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கனக ராஜு எனும் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் சமுத்திரக்கனி திரைக்கதைக்கு ஏதேனும் சுவாரசியத்தை வழங்குவார் என எதிர்பார்த்தால் அதுவும் மிஸ்ஸிங்.
படத்திற்கு முதல் எதிரி அதன் நீளம். பிரம்மாண்டம் என்ற ஒற்றை வார்த்தையை ரசிகர்களுக்கு கடத்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழு கதைக்காகவும், அதன் அழுத்தமான திரைக்கதைக்காகவும் சற்று கூடுதலாக யோசித்து இருக்கலாம்.
பிரபாஸ் இது போன்ற கதாபாத்திரங்களில் தோன்றுவது அவருடைய நட்சத்திர தரத்திற்கு குறைவு என்றாலும்தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தில் பொருந்தி ரசிகர்களை சிறிதளவேனும் ஆறுதல் தருகிறார். அவருடைய முகத்தில் இளமை தொலைந்து முதுமை எட்டிப் பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் இருந்தாலும் சண்டை காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் தனது ரசிகர்களை திருப்தி படுத்துகிறார் பிரபாஸ்
கனகராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத் – இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
மக்கள் தியான பயிற்சியில் ஈடுபட்டு அவர்களின் ஏழு சக்கரங்களையும் இயக்கினால் அவர்களை எதிர்மறை சக்தியால் வீழ்த்த இயலாது என்பதை சொல்வதற்காக இயக்குநர் கற்பனை கலந்த திகில் படத்தை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இது ரசிகர்களுக்கு புரியாதது தான் இதன் பலவீனம்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும், எஸ் தமனின் இசையும், வி எஃப் எக்ஸ் காட்சிகள் தரமாக இருந்தாலும் நிதி அகர்வால் -மாளவிகா மோகன்- ரீத்தி குமார் ஆகியோர் கவர்ச்சியாக திரையில் தோன்றினாலும் கங்காதேவி கதாபாத்திரத்தில் நடிகை ஜரினா வஹாப் சிறப்பாக நடித்திருந்தாலும் ரசிகர்களை கவரக்கூடிய அம்சமும், தருணங்களும் மிக மிக குறைவு.
தி ராஜா சாப் – ஆறி போன டீ

