திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவாலயங்களில் நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது.
அதையொட்டி நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.20 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கமாக நடராஜர் கோவிலில் உள்ள திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு நான்கு மாட வீதியில் உலா நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. முன்னதாக பராம்பரிய முறைப்படி சாமி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து பிரகார உலா நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது லேசான சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மகிழ மரம் அருகில் நடராஜர் ஊடல் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக சின்ன நடராஜர் உற்சவம் மூலம் ஊடல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் நேற்று பெரிய நடராஜர் உற்சவம் மூலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பெரிய நடராஜர் உற்சவத்தின் மூலம் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.