Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றிய அரிய தகவல்கள்

June 16, 2021
in News, ஆன்மீகம்
0

108 திவ்ய தேசங்களிலேயே இந்த ஆலயத்தில் இருக்கும் பெருமாள்தான், கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இந்த திருமேனி 22 அடி நீளம் கொண்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு திருத்தலத்தில், ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 13 மலைநாட்டு திருத்தலங்களில் ஒன்று. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. கோதை மற்றும் பறளியாறு ஆகிய ஆறுகள் இந்த ஊரை சுற்றியபடி (வட்டமடித்தபடி) ஓடுவதால், இந்த ஊருக்கு ‘திருவட்டாறு’ என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

ஒரு முறை பிரம்மதேவன் யாகம் ஒன்றை செய்தார். அந்த யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் ஏற்பட்டது. அவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர். இதையடுத்து திருமால், கேசனை அழித்து, கேசியின் மீது சயனம் கொண்டார். கேசியின் மனைவி, திருமாலை பழிதீர்க்கும் நோக்கத்துடன் தாமிரபரணியையும், கங்கையையும் வேண்டினாள். அவர்கள் இருவரும் பெருக்கெடுத்து திருமால் சயனித்திருந்த இடம் நோக்கி ஓடிவந்தனர்.

அப்போது பூமாதேவி, திருமால் பள்ளிகொண்டிருந்த இடத்தை மேடாக உயர்த்தினாள். இதனால் அந்த இரு நதிகளும் திருமாலை சுற்றி வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தன. இதனால்தான் இந்த தலத்திற்கு ‘வட்டாறு’ என்று பெயர் வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

இந்த ஆலய இறைவனின் திருநாமம், ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்பதாகும். தயாரின் திருநாமம் ‘மரகதவல்லி நாச்சியார்.’ இந்த ஆலயத்தின் பிரதான வாசல் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஆலயமானது சேரநாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபம், ஒற்றைக் கல்லினால் ஆனது. இந்த ஆலயத்தில் ‘போத்திமார்’ என்பவர்கள்தான் இறைவனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். இந்த ஆலயத்தின் கொடிக்கம்பத்தில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவில் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கு ஏந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலைகள் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பலிபீட மண்டபத்தில் இருபுறமும் ஒற்றைக் கல்லினால் ஆன பல கலைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலய இறைவன் மீது நம்மாழ்வார் 11 பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ‘களப பூஜை’ சிறப்பு வாய்ந்ததாகும். வைகுண்ட ஏகாதசியும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனான ஆதிகேசவப் பெருமாள், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை பார்த்த வண்ணம் சயனித்து இருக்கிறார். இந்தக் கோவிலில் பால் பாயசம், அவல், அப்பம் போன்றவை நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படுகின்றன.

அமைவிடம்

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். திருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

* இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் திருமேனியானது, கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16,008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

* 108 திவ்ய தேசங்களிலேயே இந்த ஆலயத்தில் இருக்கும் பெருமாள்தான், கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இந்த திருமேனி 22 அடி நீளம் கொண்டது.

* இந்த சயனக் கோல பெருமாளை, கருவறையில் உள்ள மூன்று நிலை வாசல்களின் வழியாகத்தான் பார்க்க முடியும். இந்த மூன்று நிலை வாசல்களையும் முறையே, ‘திருமுகம்’, ‘திருகரம்’, ‘திருப்பாதம்’ என்று வர்ணிக்கிறார்கள்.

* திருமுக நிலை வாசலில் சயனத்தில் உள்ள பெருமாளின் முகத்தையும், நீட்டிய இடது கரத்தையும், ஆதிசேஷனையும், கருடாழ்வாரையும் தரிசிக்கலாம்.

* திருக்கர நிலை வாசலில், சின்முத்திரை காட்டும் பெருமாளின் வலது கரத்தையும், சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஐம்படைகளையும் தரிசிக்கலாம். நடுநிலை வாசலான இதில் தரையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி – பூதேவி சமேத பெருமாளின் உற்சவத் திருமேனியையும் காணலாம்.

* திருப்பாத நிலை வாசலிலில், பெருமாளின் திருபாதங்களையும், பெருமாளை சரணடைந்த அரக்கர்களையும் தரிசிக்கலாம்.

http://Facebook page / easy 24 news

Previous Post

உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Next Post

பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

Next Post
அரசியலில் குதிக்க அறிவு வேணும் : விஜய் சேதுபதி

பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures