தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் நேற்று முன்தினம், சவுதி அரேபியா வான் வழிதாக்குதல் நடத்தியது. இதில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேர் பலியாகினர். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஆனால், ‘வான்வழித் தாக்குதல் நடத்தவில்லை’ என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபருக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன.சவுதி அரேபியா தொடர்ந்து கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.