Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை! என்ன பூஜை?

June 15, 2021
in News, ஆன்மீகம்
0

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் ‘வாராந்திர சேவைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் ‘வாராந்திர சேவைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்திய பக்தர்கள், சேவையில் பங்கு கொண்டு ஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் தேவஸ்தான அலுவலகம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொண்டு இவற்றில் கலந்து கொள்ளலாம்.

திங்கட்கிழமை – விசேஷ பூஜை

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை ‘விசேஷபூஜை’ . இந்த சேவை கோயிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஶ்ரீதேவி, பூதேவி உடனுறை ஶ்ரீமலையப்பஸ்வாமிக்கு நடைபெறுகின்றது. பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இந்தச் சேவை 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டு ஆர்ஜித சேவையாக நடைபெற்று வருகின்றது.

திருமலையான் ஆலயத்தில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்தியம் நடைபெற்ற பிறகு மலையப்ப ஸ்வாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். வைகானச ஆகம் சாத்திர முறைப்படி ஹோமங்கள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நிர்வகிக்கப்படுகிறது.. இந்தச் சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை – அஷ்டதள பாதபத்மாராதனம்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே ‘அஷ்டதள பாத பத்மாராதனம்’ சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.

புதன்கிழமை – சஹஸ்ரகலசாபிஷேகம்

ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை ‘சஹஸ்ரகலசாபிஷேகம்’ போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.

வியாழக்கிழமை – திருப்பாவாடை – நேத்ர தரிசனம்:

பிரதி வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் ‘திருப்பாவாடை சேவை’ ஆகும். இதை ‘அன்ன கூடோத்ஸவம்’ என்றும் கூறுவார்கள்.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள். பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படிச் செய்வார்கள்.

வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர்.

இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.

பூவங்கி சேவை

பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு எம்பெருமானுக்கு நடைபெறும் தோமாலை சேவையை ‘பூவங்கி சேவை’ என்பர். ஆனால், இந்தச் சேவை மட்டும் முழுமையாக ஏகாந்தமாக நடைபெறும். ஜீயர் ஸ்வாமிகள் எடுத்துக்கொடுக்க பூமாலையை அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருமேனியில் அணிவிப்பர். எம்பெருமான் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று அது காட்சியளிக்கும். இந்த சேவை ஆன பிறகு பிரதி வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானை தரிசிக்கலாம்.

வெள்ளிக்கிழமை அபிஷேகம்

ஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி மூலமூர்த்திக்கு ஒவ்வொரு பிரதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தை பகவத் ராமாநுஜாச்சார்ய ஸ்வாமிகள் துவக்கிவைத்துள்ளார். அவர், எம்பெருமானின் திருமார்பில் உறையும் ‘தங்க அலர்மேல் மங்கை’ உருவத்தை அலங்காரம் செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அபிஷேகம் நடைபெறும்படிக்கு ஏற்பாடு செய்தார்களாம். இந்த சேவை பகவத் ராமாநுஜர் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

ஆகாசகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்

முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி வம்சத்தவர் கொண்டு வந்த குடத்தை முதலில் பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் ஆகாசகங்கை தீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து ஹரி: ஓம் ஸஹஸ்ரசீர்ஷா: புருஷ: என்று புருஷசூக்தத்தினை தொடங்குவார். குலசேகரப்படிக்கு வெளியே உள்ள பண்டிதர்கள் புருஷசூக்தத்தினை ஜீயர்ஸ்வாமிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பிறருக்குக் கேட்கும்படி உச்சரிப்பர். இவர்கள் அபிஷேகம் நடைபெறும் வரையிலும் பஞ்சசூக்தங்களையும் சேவித்துக் கொண்டே இருப்பர். ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்ற வரையிலும் ஸ்வாமி திவ்யமங்கள மூர்த்தியைப் பார்த்து பக்தர்கள் அந்த அபிஷேகத்தை தாமே செய்வதைப் போன்று எண்ணி, மெய் மறந்து போவார்கள்.

புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணி நேரம் அபிஷேகம் நடைபெறும். அதன்பின்னர் மஞ்சளினால் ஸ்வாமியின் திருமார்பில் உறைந்துள்ள மஹாலக்ஷ்மிக்கும் இந்த அபிஷேகம் நடைபெறும்.

நிஜபாத தரிசனம்

பிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானை தரிசித்துச் சென்ற பின்னர் ‘நிஜபாத தரிசனம்’ தொடங்கும். ஸ்வாமியின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்க ஏதுவாகிறது. மற்ற நேரங்களில் அந்த திருவடிகளுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும்.

இந்த அபிஷேக சேவையை திருமலையான் மாதிரி ஆலயத்தில் சித்திரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசிக்கலாம்!

Next Post

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது

Next Post
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures