திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (2) மூதூர் நீதிமன்ற நீதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அக்காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அந்தப் பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றுக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டு காணி உரிமையாளர்களுடன் மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் கலந்துரையாடினார்.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.

அதன் பின்னர் அப்பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன.
அந்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.
