வடக்குக்கான திட்டங்களை கொழும்பு அரசு தயாரிக்கும்போதே எங்களையும் அதில் உள்வாங்குங்கள். திட்டங்களைத் தயாரித்த பின்னர் எங்களை அதில் இணைந்துக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள் என்று திணிக்க வேண்டாம்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று மதியம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் முடிவில் முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, அமைச்சர் நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியனுக்கு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினர். அதிலே எங்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து கொள்ளும்படி கேட்டிருந்தேன். மத்திய வங்கியால் மக்களுக்கு வழங்கும் நன்மைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
50 ஆயிரத்துக்கு குறைவான கடனை பெற்றுக்கொள்பவர்கள் ஆறு மாதத்துக்குள் வட்டி மற்றும் முதலினை செலுத்த தேவையில்லை என்ற சட்டம் வந்திருக்கின்றது.கடனை பெற்றவர்கள் அதற்கான தொழில் முயற்சிகளை மேற்கொண்டு அதனை மீளவும் செலுத்தினால் போதுமானதாகும். இவ்வாறு பல்வேறு திட்டங்களை மத்திய வங்கி அறிமுகம் செய்திருக்கின்றது. அதனை மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவோம் என்று கூறியிருந்தேன்.
கொழும்பு அரசு எந்தவொரு செயற்திட்டத்தை தயாரிக்கும் போது எங்களை உள்வாங்குமாறு நான் கூறியிருந்தேன்.திட்டத்தை தயாரித்து விட்டு எங்களை இணைத்து கொள்ளுங்கள், ஏற்று கொள்ளுங்கள் என்பதை விட திட்டங்கள் தயாரிக்கும் போது எமது உள்ளீடுகளையும் உள்வாங்குமாறு கூறியிருந்தேன். அதிகார பரவலாக்கல் இருப்பதை ஏற்றுக் கொண்டால் எங்களையும் உள்வாங்க வேண்டும் தயாரிக்க நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அமைச்சர் மங்கள கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டார்.
மகாவலி அதிகாரசபையின் அதிகாரம் முழு நாட்டுக்கும் பரவியிருப்பதால் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அதிலே கருத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மகாவலி அதிகாரசபை தான்தோன்றி தனமாக செயற்பட்டு வருகின்றது. அதனை நிறுத்த வேண்டும் என்றால் அந்தச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் – என்றார்.