முல்லைத்தீவுக் கடலில் இடம்பெறும் சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடியைத் தடுத்து நிறுத்தும்படி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது அந்த மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் பெயர்களை நீரியல்வளத் திணைக்களத்தினர் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர் என்றும் அதனடிப்படையில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கியுள்ளனர் என்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களில் பெரும்பாலனவர்கள் ஒன்றுகூடி நேற்றுமுன்தினம் நீரியல்வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளைத் தம்முடன் பேசவருமாறு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள். அதிகாரிகள் நீண்டநேரமாகியும் சந்திக்க வராமையினால் பொலிஸ் தடையைத் தகர்த்தெறிந்து உள்ளே புகுந்தார்கள். நீரியல்வளத் திணைக்களத்தின் ஜன்னல்கள் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாவட்ட உதவிப் பணிப்பாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் ஆரம்பித்திருந்தார்கள். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் மன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்கள்.
‘‘மாவட்ட உதவிப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் பெயர் குறிப்பிட்டோரை முதல்கட்டமாக கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குற்றவியல் சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, அரச வாகனத்தைச் சேதப்படுத்தியமை, அரச ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தமை, கல்லால் எறிந்து ஊழியருக்குக் காயம் எற்படுத்தியமை ஆகிய குற்றங்கள் சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்’’ என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
