தமிழக அரசின் தலைமை செயலர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பல வழிகளில் முயற்சித்து வருவது, கோட்டை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலராக, கிரிஜா வைத்தியநாதன் உள்ளார். இவர், 2016 டிச., 22ல், பொறுப்பேற்றார். ஜெ., மறைவுக்கு பின், மிகவும் இக்கட்டான அரசியல் சூழலில், தலைமை செயலராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளார்.
இந்த சூழ்நிலையில், கூடுதல் தலைமை செயலராக உள்ள, சண்முகம், ஞானதேசிகன், ஹன்ஸ்ராஜ் வர்மா, நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட சிலர், தலைமை செயலர் பதவிக்கு வர முயற்சித்து வருகின்றனர்.தலைமை செயலர் பதவியில் நீடிக்க, கிரிஜா வைத்தியநாதன் விரும்பவில்லை. எனவே, ‘அவரை வேறு பதவிக்கு மாற்றிவிட்டு, அந்தப் பதவியில் என்னை நியமியுங்கள்’ என, கூடுதல் தலைமை செயலர் பதவியில் உள்ள மூன்று பேர், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
அதில், பல்வேறு புகார்களுக்குள்ளான அதிகாரிகளும் அடக்கம். அவர்களை தலைமை செயலராக நியமிக்கக் கூடாது என, சில ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். தலைமை செயலரை மாற்றுவதாக இருந்தால், நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும் என, சில அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை செயலர் பதவிக்கு போட்டியிடுவோரில், லஞ்சப் புகாருக்கு ஆளானவர்களும் உள்ளனர். நேர்மையான அதிகாரியும் இருக்கிறார். எனவே, முடிவெடுக்க முடியாமல், முதல்வர் தவித்து வருகிறார். இதனால், தலைமை செயலர் மாற்றப்படுவாரா, மாட்டாரா என, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்தியில், விவாதம் நடந்து வருகிறது.