எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீட குழுக் கூட்டம் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் இன்று (01) இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவர்களான அமைச்சர்கள் பழனி திகாம்பரம் ராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார் வேலுகுமார்,மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன் ,உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, குருசாமி,தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா ஜாப்டர், பிரதிப் பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் உயர்பீட உறுப்பினர்களான ஏ.லோரன்ஸ்,அனுஷா சந்திரசேகரன், பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உயர்பீட கூட்டத்தின்போது ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் குறித்த கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும், சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

