தமிழ் மக்களுடைய அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலை ஒழிப்பவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அருண்காந்த் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற காணிகளையும், இரண்டு மாகாண சபைகளையும் தக்கவைத்துக்கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும் சூழ்நிலையில், யதார்த்த அரசியல் சூழ்நிலைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு தமிழ் தலைவர்கள் தமக்கான அரசியலை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் மீளவும் பெறப்படும் போது, மறுபக்கம் கிழக்கு மாகாணத்திலும் வன்னியிலும் தமிழ் மக்களது காணிகள் ஏனையவர்களால் அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இவை ஒருபக்கமிருக்க தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தமிழ் மக்களின் மண்ணிலுள்ள வளம் அப்பட்டமாக மண் மாபியாக்களால் சூறையாடப்பட்டுகின்றது.
அதாவது,வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் நடைபெற்றுவரும் ஹில்மனைட் கலந்த மண் அகழ்வு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மண் அகழ்வு போன்ற செயற்பாடுகள் தமிழ் அதிகாரிகளின் ஆதரவுடனும் அதேபோன்று தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் தான் இவை மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது இடையிலே கட்டப்பட்டிருக்கும் கோமணத்தையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டுமேயொழிய நவீன கோட்,சூட் தேடி அழைவதை நிறுத்த வேண்டும்.
‘தீர்வுத் திட்டம்’ என்று தமிழ் மக்களை நம்பவைத்து காலம் கடத்துவது மாத்திரம்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
ஆகையால் தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளையும், அதிகார அரசியலை பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களுடைய அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவுக்கு கொண்டுவரும் கொள்கைகளை யார் முன்வைக்கின்றார்களோ அந்தக் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

