தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எனினும் இதுவரையில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய சிம்மாசன உரையில் தமிழ் மக்கள் தொடர்பாக எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை எனக்குறிப்பிட அவர், அதுடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை விடுத்திருந்தபோதும், இற்றை வரைக்கும் அந்த சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துச்சொல்லவேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி பேசாமலிருப்பது கவலையளிப்பதாகவும், பெரும்பான்மையான சிங்கள மக்களின் பிரச்சினையை கையாள்வதிலேயே அவருடைய செயற்பாடுகள் இருப்பதை அவருடைய பேச்சுக்களில் அறியக்கூடியதாக இருக்கின்றதாகவும் செல்வம் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

