தமிழ் மக்கள் பேரவையை வடக்கு மாகாண முதலமைச்சரும், பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் மறுசீரமைத்துள்ளார். இதுவரை பேரவையின் முடிவுகள் அதன் மத்திய குழுவின் ஊடாகவே எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த அதிகாரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மத்திய குழுவாக இங்கு இன்று கூடியிருக்கும் அதே வேளையில் எமது குறிக்கோள்களை நெறிப்படுத்தும் போது கட்சி அரசியல் சார்பற்ற ஒரு சிலரை செயற்குழுவாக நியமித்து அவர்கள் ஊடாக தீர்மானங்களை எடுத்தால் நல்லது என்று அபிப்பிராயப்படுகின்றோம். மத்திய குழு இன்றிருப்பது போல் தொடர்ந்து இருக்கும். இன்று வந்திருக்கும் மூவரையும் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மத்திய குழுவினுள் உள்ளடக்கலாம்.
எமது மத்திய குழு முன்போல காலத்திற்கு காலம் கூடும். ஆனால் எங்களுள் இருந்து ஒரு சிலரை செயற்குழுவுக்கு நியமிக்க உத்தேசித்துள்ளோம். இந்தக் குறைந்த தொகையினர் வேண்டும்போது மாதாமாதம் கூடலாம். மத்திய குழு அங்கத்தவர்கள் வேண்டும் போது தமது அறிவுரைகளை எமக்கு வழங்கலாம்.
ஆனால் இறுதித் தீர்மானங்கள் இந்த செயற்குழுவையே சாரும். நிர்வாகத் திறன் கருதியும், குறைந்தோர் கூடிய விரைவில் கூட முடியும், தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற காரணத்தாலும், தீர்மானங்களைக் கட்சி அரசியல் சார்ந்து எடுக்காமல் இயக்கத்தின் குறிக்கோள்களை மையமாக வைத்து எடுக்கவும் இந்த வழிமுறை பலனளிக்கும் என்று எண்ணுகின்றோம் என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 11 பேரைக் கொண்ட செயற்குழுவை நியமித்தார்.