தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை இந்த தேர்தலில் நிருபித்துக் காட்டவேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஞானமுத்து சிறிநேசன் எம் இனத்தினை அழித்தவர்களுக்கு தோள் கொடுத்து அவர்களின் தரகர்களாக வருபவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உரிமையில்லாத அபிவிருத்தி அத்திவாரமில்லாத கட்டடம் போன்றது உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே தமிழ் மக்களுக்கு தேவை என்பதையும் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார நடவடிக்கைளில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஞானமுத்து சிறிநேசன் பன்குடாவெளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றுகையில்
“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் வாக்குகளைப் பிரிப்பதற்கு ஆறு குழுக்களாகப் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 50 ஆயிரம் தமிழ் வாக்குகளை வீணாக்கப் போகிறார்கள் எவரும் வெற்றிபெறப்போவதில்லை.
அழிக்கப்பட்ட மக்களுக்காக பேசுகின்றோம் ஒழிக்கப்பட்ட மக்களுக்காகப்
பேசுகின்றோம் என கூறியவர்கள் தற்போது அழித்தவர்களின் முகவர்களாக தோள்கொடுத்து எம்மத்தியில் வருகிறார்கள் அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். அவர்களின் பின்னால் விடயங்களை அறியாத சில கூட்டம் திரிகிறார்கள் நாளை அவர்களின நிலை என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
அன்புக்குரிய தங்கேஸ்வரி அக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் போது 46 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார் அவர் கட்சி மாறியதால் 1500 க்கும் குறைவான வாக்குகளே பெற்றார். அக்காவுக்கு 2010ஆம் ஆண்டு பாடம் புகட்டிய மக்கள் தேர்தலில் பெற்றி பெற்று கட்சிதாவிய தம்பிக்கு இந்த தேர்தலில் எமது உறவுகள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அரசியல் உரிமைகள் இல்லாத அபிவிருத்தி எமது மக்களை ஏமாற்றும் செயலாகவே காணப்படுகிறது. அரசியல் உரிமையை நாங்கள் கேட்கின்றோம் சிங்கள அரசாங்கங்கள் இல்லையென மறுப்பதற்காக நாங்கள் அதிலிருந்து ஒதுங்க மாட்டோம்.
எங்களுக்கு அரசியல் தீர்வு வழங்காமல் ஏறமாற்றியவர்கள் போராட்டத்தை சிதைத்தவர்கள், எமது பிள்ளைகளை கடத்தியவர்கள் காணாமல் ஆக்கியவர்கள், புத்திஜீவிகளை சுட்டுக்கொண்டவர்கள், தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்களை வெலிக்கந்தையில் வைத்து கடத்தி கொண்றவர்கள் எமுவுமே செய்யாத நல்லவர்களைப் போன்று எமது மக்களிடம் வருகின்றார்கள் அவர்கள் தொடர்பாக எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
பிழைப்பதற்காக உழைப்பதற்காக அரசியல் செய்ய வந்தவர்கள் கடந்த காலங்களில் நன்றாக உழைத்துவிட்டார்கள் ஒன்றுமே இல்லாமல் வந்தவர்கள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டார்கள்” என்றார்.