30 வருடங்களுக்கு மேல் இலங்கைத்தீவிற்குள் தமிழ்த்தேசிய இனமாக தனித்துவமான இறைமையையும் கட்டுமானத்தையும் கொண்ட நாடாக தமிழ்த்தேசம் கட்டியாளப்பட்டது.பல்வேறுபட்ட சூழ்ச்சிகளாலும் துரோகத்தினாலும் கவிழ்க்கப்பட்டு தமிழினத்தின் விடுதலையை நட்டாற்றில் விட்டு சிங்களத்தேச அரசாங்கம் இலங்கைத்தீவின் விடியலையும் இறைமையையும் பாதுகாத்துள்ளோம் என பறையடித்து வருகின்றது. கொஞ்சமும் ஈவிரக்கமின்றி பல மக்களை கொன்றுகுவித்தும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும் சிங்களப்படைகளையும் முகாம்களையும் கைப்பற்றிக்கொண்டுள்ளது. அது போதாதென்று தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் பரப்பிவருகின்றது. அண்மைக்காலங்களில் தென்சிங்கள மக்கள் வடக்கில் தமது மூதாதையரின் காணிகள் உள்ளதாக சர்ச்சையினை ஏற்ப்படுத்தி வருகின்றது. சமகால அரசியலை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான நீதியினை பெற்றுத்தந்துவிடும் என எதிர்பார்ப்புகளும் இதுவரையில் இழவுகாத்தகிளியாகவே நடந்துவருகிறது.
இன்றுவரையில் கொலைசெய்யப்பட்ட தமிழினங்களையும், கைது செய்யப்பட்ட தமிழ்க்கைதிகளுக்கும், காணாமல் ஆக்கபட்டவர்களுக்கும், பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களுக்கும் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும் தருவாயில் தமிழ் இனத்தின் அரசியல் சிந்தனையிலும் பார்வையிலும் அணுகுமுறையிலும் முரண்பாடுகளை ஏவிவிட்டபடி நிற்கிறது.
இன்றுவரை தமி்ழினம் படும் வேதனைகளையோ, பொருமல்களையோ சிங்கள அரசியல்வாதிகள் யோசிப்பதும் இல்லை மேலும் இடையூறுகளை கொடுத்தவண்ணமேயுள்ளனர். தமிழீழ விடுதலை போராட்டம் தொடங்கப்பட்டதன் காரணங்கள் என்ன? அத்தோடு இன்றுவரை தமிழ்த்தேச மக்களின் உணர்வுகளில் படிந்துள்ள ஆறாவடுக்கள் எப்படி ஏற்ப்பட்டது என்பது சிங்கள அரசியல் பேரினவாதிகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது என சில சிங்கள தலைமைகள் மத்தியில் தவறான கருத்துக்கள் ஊடுருவியுள்ளது. மக்களின் ஆழமான வடுக்கள், அனுபவங்கள் தெரியாமல் ஆராயப்பட்டிருக்கலாம்.
ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றி பொதுவாக
வரையறை செய்வோமேயானால்
- மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக வாழ்கின்ற வரையறுக்கப்பட்ட பாரம்பரிய தாயக நிலப்பரப்பு
இன்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வாழ்கின்ற பாரம்பரிய எம் தாய்நிலங்கள் எங்கே? இராணுவ முகாம்களாக மேவியுள்ளன. எங்களால் தொடர்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வழி விடுகின்றனரா? இனியும் விடுவார்களா? என்பது மக்கள் மத்தியில் கேள்விகளாகவே உள்ளன. - மக்கள் கூட்டத்தின் வளம் பொருந்திய பண்பாடு
தமிழ் இனம் ஒரு காலத்தில் ஈழமண்ணில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து கலை இலக்கியங்களால் பெருமைப்பட்டதாக இருந்தது. யாழ் நகரமே பாரம்பாரிய பண்பாட்டின் கோலத்தில் இருந்தது. மதம் சார்ந்தது அல்லாமல் தாம் பேசும் மொழிக்கு தமிழர்கள் விழா எடுத்தனர். 1956ம் ஆண்டு தனிச்சிங்கள சட்டக் காரணத்தினால் துப்பாக்கிமுனைகள் இன ஒடுக்குமுறையை வன்மமாகியது.
வரலாற்றில் தமிழ் பாரம்பரிய பண்பாடு அம்சங்களை தன்னகத்தே கொண்ட ஓர் இனமாக வளர்ந்திருந்தது. பன்முகப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளால் சேறுபூசப்பட்டது. - மக்கள் கூட்டத்திற்கான செழுமை மிக்க பொதுமொழி
என் இனம் தமிழினம் என் மொழி தமிழ் என் தாய் மொழிக்கே சிறந்த செழுமை உள்ளது. உலக வரலாற்றில் அதை ஒடுக்குபவனும் வசைப்பவர்களும் அருகிலிருக்க எமக்கு எதற்கு பொதுமொழி. என் மொழியே என்னை கட்டியாளவேண்டும். முதலில் எம் இனத்திற்கான செம்மொழியும் உயிர்மொழியும் தமிழே. என் மொழியை தாக்குபவனும் ஒடுக்குபவனும் அழிக்க நினைப்பவனும் எம் முதல் எதிரியே. எம் இனத்திற்கு பொதுமொழி என்று ஒன்றில்லை. தாய்மொழியே தமிழ் அதை எப்போதும் போற்றவேண்டும்.
04.மக்கள் கூட்டத்திற்கு உரித்தான பொருளாதார கட்டமைப்பு அல்லது பொதுப்பொருளாதார கட்டமைப்பு
அன்று தமிழ் மக்கள் தன்னிறைவு பொருளாதாரத்தினை கட்டியெழுப்பியிருந்தனர். பாரிய பொருளாதார வளர்ச்சியையும் பெற்றிருந்தனர். அனைத்தையும் இன்று சுடுசாம்பலாக்கி கையேந்தும் பொருளாதார கட்டமைப்பை வளர்த்துவிட்டார்கள்.
ஈழ மக்கள் வரலாற்றில் மிக மோசமான யுக்திகளை கையாண்டு இந்த சிங்கள பேரினவாத அரசியல் தலைவர்கள் படுகுழிக்குள் தள்ளிவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.
05.மக்கள் கூட்டம் தம்மைத்தாமே ஆளுகின்ற அரசியல் முதிர்ச்சி தமிழின மக்கள் ஒரு காலத்தில் தம்மை தாமே ஆளுகின்ற இன விடுதலையை தலையில் சுமந்து ஒரு வல்லரசாக திகழ்ந்திருந்தனர். இன்று அடிமை அரசியல் முதிர்ச்சியாக உள்ளது. இது தமிழின மக்களிடையே காட்டும் சிங்கள அரசியலின் ஆற்றல் மிக்க முதிர்ச்சியை காட்டுகிறது.
06.சர்வதேச உறவுகளை பேணக்கூடிய அரசியல் இராஜதந்திர முதிர்ச்சி எம் பெருமைக்குரிய தமிழினம் துரோகத்தாலும் பலநாட்டு சதிகளாலும் அழித்தொழிக்கப்பட்டது என்பது உலகறிந்ததே. ஒரு சில நாடுகள் நட்புப் பாராட்டி பிறமுதுகில் குத்துவார்கள் என்பது யார் அறிந்தது. சில நயவஞ்சகர்களின் சதிகள் அறிந்தும் அறியாமல் இருப்பது அரசியல் ராஜதந்திர முதிர்ச்சி போலும்.
07.தொடர்ச்சி குன்றாத இனத்துக்கே உரித்தான வரலாறு தொடர்ச்சி குன்றாத இனம் என சிங்கள இனத்தினை கூறமுடியும். இன்றும் தமிழ் இனத்தினை ஓரங்கட்டுவதும் அடக்கி ஒடுக்குவதுவும் சிங்கள அரசியல் பேரினவாதிகளின் தலையாய கடமையாக உள்ளது. ஒரு இனத்தின் மீது இன்னோர் இனம் அடக்கி ஒடுக்குவதென்பது தமிழ் இனத்தின் மீது கட்டவி்ழ்க்கப்படுகின்ற சிங்கள அரசியல் கூட்டத்தின் திட்டமென்பது வெளிப்படையாக உணர முடிகிறது.
தமிழர்களுக்கான விடுதலை போராட்டம் என்ற பாணியில் பலலட்சம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர் என கணக்கிட்டவர் மத்தியில் தொடர்ச்சி குன்றாத இனத்துக்கே உரித்தான வரலாறு என்பது மிகப்பெரும் தவறு. மூடிமறைக்கப்பட்டு வருகின்ற எம் தமி்ழின வரலாற்றினை தொடர்ச்சியாக பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே எமது நோக்கம்.
மேற்குறிப்பிட்ட 07 தலைப்பினை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களையோ அவர்களின் மீதோ பொருத்திப்பார்ப்பதென்பது மிகப்பெருந்தவறாகவே தமிழ் மக்களால் உற்று நோக்கமுடியும். எவ்வித அடிப்படையிலும் தேசிய இனமாக தகுதிகளையோ அதற்கான எவ்வித உடன்பாடுகளையோ சிங்கள அரசியல் பிரமுகர்கள் நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனம்.
தமிழ் தேசியம் தேசியம் என்பது பிரதேசம், இனம், மொழி, மதம், பண்பாடு, வாழ்க்கைமுறை, அனைத்திலும் மனித உணர்வும் ஒருமைப்பாடும் இறையாண்மையை கொண்டதுமான ஒரு மக்கள் திரட்சியையே தேசியம் எனப்படுகிறது. இதை எதாவது ஒன்றினை தனித்து விட்டு தேசியம் என்பது முரண்பாடானது.
1921ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தினால் மாற்றியமைக்கப்பட்ட புதிய சட்டமானது முதல் முதலில் இனவாரி பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அன்றிலிருந்து சிறுபான்மை இனமாக தமிழர்களும் பெரும்பான்மையினராக சிங்களவர்களும் இனரீதியாக பிரிக்கப்பட்டனர். தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வானது நீறுபூத்த நெருப்பாக காணப்பட்டது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்கக்கூடிய காலகட்டத்தில் தமிழ் சிங்கள சமூகங்களுக்கிடையே அரசியல் பதற்றத்தினை தோற்றுவித்தது.
ஈழ தமிழினத்தின் அரசியலை நிர்ணயிப்பதில் புவியியல், அரசியல், பொருளியல், சமூகம், பண்பாடு இவற்றின் அடிப்படையில் என்பதும் ஏற்புடையதல்ல. அனைத்து கட்டமைப்புக்களையும் சீர்குலைத்தது மட்டுமல்லாது இன்றைக்கும் சீர்குலைக்கப்படுகின்ற இந்த கட்டமைப்புக்களை மீளுருவாக்கம் செய்வதென்பதுவும் இலகுவான காரியமல்ல. அக்கட்டமைப்பினை தகர்த்தெறிந்த சிங்கள அரசியல் தலைவர்களின், சிங்கள ராணுவத்தினரின் அறிவுபூர்வமான செயல்களுக்கும் கட்டமைப்புச் சிதைவுக்கும் தமிழர்கள் துணைபோனவர்களல்ல.
தமிழ் மக்களின் ஒரே கோட்பாடு மக்களுக்கான சுதந்திரம், தமிழர்களுக்கான தனிநிலம், நில ஆக்கிரமிப்புகளை முற்றாக ஒழிக்கப்படல்,தமிழ் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, என்பன தமிழ் மக்களுக்கான முதன்மை குரலாக மாறியுள்ளது.
பல லட்சம் மக்களை கொன்றோழித்து இந்நிலையில் இருந்து விடுதைக்கான பயணத்தை தொடர முடியும் என்பது வியப்புக்குரியதும் நகைப்புக்குரியதாகவும் தெரிகிறது. சிறுபான்மையிடத்தினரிடம் காட்டுமிராண்டித்தனமாகவும் நிமிரவிடாமல் எதிர்ப்பதுவும் கருத்து, எழுத்துச்சுதந்திரத்தை தடை விதிப்பதும் கருத்துக்களையும் உண்மைகளையும் கூறினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதும் இன்றுவரை ஏகபோகமாக நடந்துவருகிறது. தமிழ் மக்களை மட்டுமல்லாது சிறுபான்மையினரான கிறிஸ்தவ , இஸ்லாம் மதத்தவரையும் பெரும்பான்மை இன அரச வெறியர்கள் அடக்குமுறை ஒடுக்குமுறைகளை நிறுத்தும் வரை நாட்டின் சமத்துவம் என்பது வினாக்களாகவே இருக்கும்.
ஒரு குடும்பத்தில் தாய் தந்தை இறந்து விட்டால் பிள்ளை அவர்களின் வரலாற்றினை அறியாமல் இருந்துவிடாது. அவர்களை பின்பற்றியே வளரும். அதனை அளிக்க முடியாது. அதே போல தான் தமிழ் மக்களின் வரலாற்றுச்சான்றாக காணப்பட்ட யாழ் பொது நூலகம் 1981ம் ஆண்டு எரித்து சாம்பலாகியது. 20ம் நூற்றாண்டின் இன கலாச்சார அழிப்புக்களில் ஒரு பெரும் வன்முறையாக காணப்பட்டது.
தமிழ் விடுதலை இயக்கம் பல வருடங்களாக சிங்கள பேரினவாதிகளிடம் நம் தமிழின விடுதலையை வேன்றிநின்றது என்பது அனைவரும் தெரிந்ததே. அந்நேரத்தில் காட்டுமிராண்டிகளாக செயல்பட்ட இலங்கை ராணுவம் கொத்துக்கொத்தாக அப்பாவி பொது மக்களையும் குழந்தைகளையும் கொன்றுகுவித்தது. இதனால் அகிம்சை போராட்டம் தமிழ் மக்களிடையே ஆயுத போராட்டமாக மாறியது. தாய் தந்தையை இழந்த சிறுவர் சிறுமிகள் மீது 2006ம் ஆண்டு இலங்கை வான்படைகள் குண்டுவீசி அழித்தது. அழித்தது மட்டுமல்லாது விடுதலை புலிகளின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக கொலைக்குற்றத்தினை மெழுகு பூசியது.
வரலாறு என்பது கட்டுக்கதைகளையோ மூடநம்பிக்கைகளையோ நம்பி எழுதப்படுவதல்ல.மக்களின் உணர்வுகளில் எழுந்துள்ள வலிகளையும் இன வன்முறைகளையும் ஒழிக்கப்படுகின்ற சமகால விடுதலைக்காய் திணறிடும் அனுபவப்பட்ட உணர்ச்சிகள்.
தமிழர் என்பது ஒரு தேசம் ஒரு இனம் 30 வருடங்களாக தனித்து நின்று களமாடியவர்கள். கோழை கூட்டங்கள் போல் அந்நிய நாட்டு இராணுவங்களின் உதவியோடு போராடியவர்கள் அல்ல. மானதமிழ் மறவர்கள் தனித்தே போராடி வீரர்களாய் தோற்றவர்கள். சிங்கத்துக்கு மான் மாலையிடுவதனால் சிங்கம் மானைவிட்டு வைக்கப் போவதில்லை. அயல் நாட்டில் கும்பிடு போடுவதால் பயனில்லை. அவனின் இராஜதந்திரம் நரிகுணங்களும் ஒருநாள் வெளிப்படும். அன்று துரோகத்தால் வீழ்த்தப்பட்ட இனம் ஓர் நாள் அதே துரோகத்தால் வீழ்த்தப்படும்.