இந்த வருட இறுதிக்குள் தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் தீர்வானது ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும், தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை முன் வைக்க இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கரவெட்டியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை உருவாக்குவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதும், இதுவரை எந்த நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. அது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 பிரேரணைகள் முழுமையாக கால அட்டவணையின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதுடன், நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பின் பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரின் காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கையப்படுத்தப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகள் எந்தவித நிபந்தனையும் தாமதமுமின்றி விடுவிக்கப்படுவதுடன், மகாவலித் திட்டத்தின் கீழும், வனபரிபாலனத்துறையின் கீழும் கையகப்படுத்தப்படும் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாகப் போர் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், உறவினரால் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் வழங்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசுக்கும் உண்டு. ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் சிபார்சுகளும், நடவடிக்கைகளும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும். அது மாத்திரமன்றி இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு குடியமர்த்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்ட பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதுடன், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும்.
மூப்பு அடிப்படையில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அரசுத் துறையில் வேலைவாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள் வயது கூடியவர்கள் இருப்பின் 45 வயதுடையவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவைத் தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும்.
போர் காரணமாகக் கல்வி பெற வாய்ப்பு அற்றவர்கள் குறிப்பாக போராளிகளாக இருந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி வழங்கி அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அவர்களுக்கும் அடிப்படைச் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கேற்ப வழங்க வேண்டும். அது வரை அவ்வாறனவர்கள் வாழ்வதற்கு நிதி உதவி வழங்கும் முறையொன்றைக் கொண்டு வர வேண்டும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவாழ்வு, வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் தொழில் துறைகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர் காரணமாக அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட பெருந் தொழிற்சாலைகள் பொருத்தமான வகையில் நவீனமயமாக்கப்பட்டு மீளக் கட்டியெழுப்புதல், போரினால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான புதிய அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சிறு தொழில்கள், மத்தியதர தொழில்கள் பெருந்தொழில்துறைகளை குறுகியகால, நீண்ட கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் போன்ற பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களின்பால் அதிக அக்கறையை அரசு செலுத்த வேண்டும் என்றும், கூட்டு எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியலாளர்கள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள், அரச துறை சாரா நிறுவனங்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட நாட்டு நலனின்பால் அக்கறையுள்ள அனைவரும் தங்களாலான சாதக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.