தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் (23 ஏப்ரல் 1972 – 18 அக்டோபர் 2015) தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும், எழுத்தாளரும் ஆவார். புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவர்.
சிவகாமி 1972 ஏப்ரல் 23 இல் பரந்தனில் சுப்பிரமணியம், சின்னம்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். 1991-ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்து தமிழினி என்ற இயக்கப் பெயரைப் பெற்றார். 2009 மே இறுதிப் போரின் போது வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவத்திரிடம் சரணடைந்தார். மூன்று ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் ஓராண்டு காலம் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு 2013 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு அவரது குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்.
தமிழினி 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த ஜெயன் தேவா என அழைக்கப்படும் மகாதேவன் ஜெயக்குமரன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.தமிழினி புற்றுநோய் காரணமாக கொழும்பு மகரகமை புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2015 அக்டோபர் 18 இல் தனது 43-ஆவது அகவையில் காலமானார்