Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவை | சுரேஷ்  

August 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மாகாண அதிகாரங்கள் பறிப்புக்குஎதிராக சகலரும் அணிதிரள்வோம்- சுரேஷ்

இளைஞர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் களமாடும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுஅமைப்புகளும் ஓரணியில் திரண்டு எமக்கான குறுகியகால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை வகுத்துச் செயற்படுவது அவசியம் என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முழக்கத்தை முன்வைத்து செயற்படுவது வெற்றியளிக்காது என்றும் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனைவரும் ஒன்றுகூடி செயற்படுத்தப்படவேண்டிய வழிமுறைகளையும் செயற்படவேண்டிய திட்டங்களையும் வகுத்துச் செயற்படுவதே எம்மினத்திற்காக தமது உயிரையும் உடைமைகளையும் ஈந்தவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையும் கௌரவமுமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

இலங்கையில் சிங்கள இனவாதம் என்பது நூற்றாண்டு பழமைவாய்ந்தது. சிங்கள பௌத்தத்தின் மறுமலர்ச்சியாளர் என்று கருதக்கூடிய அனகாரிக தர்மபால என்ற பௌத்த துறவி நூறாண்டுகளுக்கு முன்னராகவே சிங்களவர்களே மண்ணின் மைந்தர்கள், தமிழர்கள், மலையாளிகள், முஸ்லிம்கள் ஆகியோர் இந்தநாட்டிற்கு வந்தேறு குடிகள் என்றும் அவர்கள் மீள தமது நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராகவும் இருந்தார். 

இதே கருத்தையே இன்றிருக்கக்கூடிய பௌத்த பிக்குகளும் தென்னிலங்கையின் இடது-வலது அரசியல்வாதிகளும் கொண்டிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்குரியது, புத்தரால் ஆசீர்வதி;க்கப்பட்டது என்ற கருத்துருவாக்கம் நாளாந்தம் சிங்கள மக்கள் மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

இந்த அடிப்படையில்தான் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள், சைவ வழிபாட்டுத்தலங்கள், நெல்வயல்கள், மேய்ச்சல் தரைகள், குடிமனைகள் போன்றவை ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களும் பௌத்த சின்னங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இவற்றிலிருந்து தமிழ் மக்களின் இருப்பை, மொழியை, கலாசாரத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணுவதற்காகவும் இந்த நாட்டில் சமஷ்டி அரசியலமைப்புமுறை ஒன்று அவசியம் என்பதை தமிழ்த் தலைவர்கள் ஒரு கோரிக்கையாக முன்வைத்தனர். அதனைத் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு அவர்களை பெரும்பான்மையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பியும் வந்தனர். 

சிங்கள அரசிற்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் ஓரிரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட போதிலும் அவை ஒருதலைப் பட்சமாக சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டன. எல்லா வழிகளும் பொய்த்துப்போக, பிரித்தானியரிடம் நாம் இழந்துபோன இறையாண்மையை மீளப்பெற்றுக்கொள்வதே தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க ஒரேவழி என்ற முடிவிற்கு தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி வந்தது. அதுவே பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இழந்துபோன இறையாண்மையைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் சரியான மூலோபாயங்களோ, தந்திரோபாயங்களோ இல்லாதிருந்ததுடன், அதனை அடைவதற்கான ஒரு வழி வரைபடமோ அல்லது திட்டங்களோ இருக்கவில்லை. ஆனால் தமிழ் இளைஞர்கள் அதற்கான திட்டங்களை வகுத்தார்கள். அடக்குமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு சுதந்திர பூமியில் வாழ்வதற்கு கனவு கண்டார்கள். 

அந்த சுதந்திர பூமியானது சமத்துவமான, சகோதரத்துவமான, செழிப்பான எமது எதிர்கால சந்ததியினர் இன்னும் பல்லாண்டு இந்த மண்ணில் நீடித்து வாழ்வதற்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்றும் சிந்தித்தனர். இதனடிப்படையில், பல நாடுகளுடன், பல விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டனர்.

பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர். வெளிநாட்டு விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி வழங்கும் அளவுக்கு தம்மை வளர்த்துக்கொண்டனர். அரசாங்கத்தின் ஆயுத ரீதியிலான அடக்குமுறைகள் அதிகரிக்க தமிழ் இளைஞர்களும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுவே பாரிய உரிமைப் போராட்டமாக மாற்றமடைந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த எமது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் சர்வதேச நாடுகளின் துணையுடன் முறியடிக்கப்பட்டது. ஆனால் இன முரண்பாடுகள் அப்படியே தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது எமது போராட்ட களங்களும் வழிமுறைகளும் மாற்றமடையவேண்டும். இன்றிருக்கக்கூடிய உள்நாட்டு, பிராந்திய, சர்வதேச நிலைமைகளைக் கணக்கிலெடுத்து, எமது மூலோபாய தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், எமது கொள்கைகளைத் தொலைத்து வெறும் நாடாளுமன்ற, மாகாணசபைகளுக்கான ஆசனங்களைக் கவனத்திலெடுத்து அந்த அடிப்படையில் அரசியல் காய்நகர்த்தலைச் செய்கின்ற தமிழ்த் தேசியம் பேசும் தலைமைகளின் போக்கை விடுத்து, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, சிங்கள பௌத்தத்தைத் திணித்து தமிழ் மக்களை அழித்தொழிக்கும் வேலைத்திட்டங்களை முதன்மைப்படுத்தும் அரசாங்கங்களை நாம் வகுத்துக்கொண்ட மூலோபாய, தந்திரோபாயங்களுக்கமைய கையாளும் நோக்குடன் செயற்படவேண்டும்.

எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து 2009ஆம் ஆண்டுவரையில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமது உரிமைகளுக்காக தமது இளமையை மறந்து தமது வசந்தகாலங்களை புறந்தள்ளி தமது உயிர்களைக் கொடுத்து, விடுதலைக்காகப் போராடினார்கள். ஆனால் இன்றிருக்கின்ற பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இத்துணை தியாகங்களை தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்களா? அல்லது இத்தியாகங்களுக்கு நீதிசெய்யும் வகையில் ஒன்றுபட்டு தீர்வை நோக்கி நேர்மையுடனும் கொள்கைப் பிடிப்புடனும் செயற்படுகிறார்களா என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக இருக்கின்றது.

தந்தை செல்வா பிரேரித்த சமஷ்டி அரசியலமைப்பு முறை, அதன் பின்னர் அவர் பிரேரித்த தனிநாட்டுக்கான 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானம், வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு தமிழ் இயக்கங்கள் நடாத்திய ஆயுதப்போராட்டம் எல்லாம் முடிவிற்கு வந்த நிலையில், மீண்டும் சமஷ்டி (கூட்டாட்சி) என்றும் கூட்டு சமஷ்டி (இணைப்பாட்சி) என்றும் இருதேசம் ஒருநாடு என்றும் புதிது புதிதாக பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றை அடைவதற்கான வழிவரைபடமோ மூலோபாயங்களோ, தந்திரோபாயங்களோ இவர்களிடமும் இல்லை. 

நீண்டகால இலக்கையும் குறுகியகால இலக்கையும் திட்டமிட முடியாதவர்களாகவும் கையில் உள்ள அதிகாரங்களை தக்கவைத்து, அதனூடாக தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி நீண்டகால இலக்கை அடைவதற்கான திட்டமிடலைச் செய்ய முடியாதவர்களாகவுமே இவர்கள் உள்ளனர். அதுமாத்திரமல்லாமல் களத்திலும் புலம் பெயர்ந்தும் இருக்கின்ற சில அறிவுஜீவிகளும் கருத்துருவாக்கிகளும் கட்சிகளினது ஆற்றல்களையும் பற்றுறுதியையும் பகுப்பாய்வு செய்யாமல் தேசிய இனவிடுதலையின்மேல் கொண்ட பற்றுதலின் காரணமாக எல்லாவிதமான குழுக்களையும் கட்சிகளையும் ஒரே மட்டத்தில் வைத்துப் பாரர்க்கின்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமைகள் மாற்றப்படவேண்டும்.

அனைத்து சக்திகளும் இணைந்த கலந்துரையாடல்களினூடு நீண்டகால குறுகியகால செயற்றிட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவரைபடங்கள் உருவாக்கப்படவேண்டும். குறுகிய அரசியல் இலாப நோக்கங்களைக் கைவிட்டு பரந்துபட்ட தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக சிந்திக்கும் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும். நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அவற்றை முதன்மைப்படுத்தி அதனூடாக இயலக்கூடிய அதிகபட்ச அதிகாரங்களை இடைக்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கான உபாயங்கள் வகுக்கப்படவேண்டும்.

அடித்தால் மொட்டை வைத்தால் குடுமி என்ற கணக்கில் சிந்திக்காமல். இடைக்காலத்தில் சாதிக்கக்கூடியவற்றைச் சாதித்துக்கொண்டு, பெற்றுக்கொள்ளக்கூடியவற்றைப் பெற்றுக்கொண்டு இறுதி இலட்சியத்தை நோக்கி முன்னேறுவோம் என்றுள்ளது.

Previous Post

வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக போராடினார்! பகிரங்கமாக பேசிய டலஸ்

Next Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures