Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்களுக்கு காவலாயிருக்கும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்? | தீபச்செல்வன்

November 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர்களுக்கு காவலாயிருக்கும்  பிரபாகரன் என்ற மந்திரச்சொல்? | தீபச்செல்வன்

வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்துவிட முடியாது. உலகின் எந்தக் கவிஞனாலும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய காவியத்தை எழுதி விட முடியாது என்பதுதான் உண்மையானது. பிரபாகரன் என்ற பெயரே கவியம்தான். ஆனாலும் அந்தப் பெயரின் முழுமையை உணர்ந்தெழுத முடியாது. நாம் தலைவர் பற்றி அறிந்துகொண்டது எல்லாமே அவர் புறவயமான வரலாறே. அவர் அகமும் புறமுமாய் இருந்த ஈழ விடுதலைப் பயணத்தை அவரால் மாத்திரமே எழுதி விட முடியும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்களின் பங்களிப்பு குறித்தும் அதற்காய் தலைவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பல நூறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. போராட்ட காலத்திலும் சரி, போராட்டம் முடிந்த பின்னரும்கூட அது பற்றி நிறையவும் எழுப்பட்டுள்ளன. அவைகளில் எல்லாம் நாம் அறிந்து கொண்ட பிரபாகரனின் வாழ்வும் வரலாறும் பார்வையும் முழுமையானதா? நிச்சயமாக இல்லை. அதைக் கடந்து பல வரலாறுகளும் உண்மைகளும் வாழ்க்கையும் உண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது வாழ்வையும் இரகசியங்களால் வளர்த்தெடுத்தவர் தலைவர் பிரபாகரன். புலிகளின் இரகசியங்களில் இருந்த நியாயம் எப்படியானது? ஈழத் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உண்மையும் நேர்மையும் அதன் வழியான பற்றுதியும் கொண்டிருத்தல் என்ற ஒழுக்கமும் மாண்புமே. அதிலிருந்து விலகக்கூடாது என்பதுடன் ஈழ மக்களின் விடுதலைப் பயணத்தை சரியான வழியில் நகர்த்தி, மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கானதே அந்த இரகசியங்களில் பொதிந்திருக்கும் கனவுகள்.

ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் எம் சிறார் பருவத்தில், தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதும் சிறுவர்களாக நாம் இருந்திருக்கிறோம். அவரது பிறந்த நாளிலும் தைப்பொங்கல் போன்ற பண்டிகை காலத்திலும் கடிதம் எழுதுவோம். அவருக்கு ஒரு முகவரியும் உண்டு. ‘வே. பிரபாகரன், தமிழீழத் தேசியத் தலைவர், தமிழீழம்.’ என்பதே அந்த முகவரி. பெரும்பாலான நாடுகளில் ஜனாதிபதிக்கு பெரியவர்கள் எழுதுகிற கடிதங்களுக்குக்கூட பதில்கள் கிடைப்பதில்லை. ஆனால் தலைவர் பிரபாகரனுக்கு எழுதும் கடிதங்களுக்கு பதில் வரும். நாம் அரிதாகக் காணுகின்ற அழகிய அந்த கையெழுத்துடன்.

தலைவர் பிரபாகரனின் வீட்டை உடைத்ததாக ஒருமுறை சிங்கள இராணுவத்தினர் அறிவித்தனர். வன்னியில் ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அதனைப் பிரபாகரன் வீடு என்றும் அறிவித்தனர். அந்த வீட்டை கைப்பற்றியதாக வீரத்தை வெளிப்படுத்த இராணுவத்தினர் முனைந்தனர். ஆனால் அந்த வீட்டை சிங்கள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்த காணி நிலத்தில் இருந்து மண்ணை அள்ளிச் சென்று தமது வீடுகளில் வைத்தார்கள். பிரபாகரன் வீடு என்பதையே ஒரு கோயில் போல சிங்கள மக்களும் வணங்கியதால் அந்த வீட்டை தகர்த்தது இராணுவம்.

ஒரு இனத்திற்காக, ஒரு இனத்தின் வீடுகளுக்காக, ஒரு இனத்தின் இருப்புக்காக, ஒரு இனத்தின் நிலத்திற்காக போராடிய தலைவனுக்கு அடையாளப்படுத்தும் விதமாய் ஒரு வீடும் நிலைப்பட்ட முகவரியும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த தேசமே அவரது வீடாக இருந்திருக்க வேண்டும். இந்த தேசமே அவரது முகவரியாக இருந்திருக்க வேண்டும். அதேபோல வல்வெட்டித்துறையில் உள்ள தலைவர் பிரபாகரன் பிறந்த வீட்டையும் இலங்கை அரச படைகள் தகர்த்துள்ளன.

ஆனாலும் அந்த வீட்டின் உடைந்த சுவர்களும் நிலமும் பற்றைகளும் தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. ஸ்ரீலங்காவின் அரசியலில் எத்தனையோ நபர்கள், ஜனாதிபதிகளாக, பிரதமர்களாக இருந்துவிட்டார்கள். தேடித் தேடி, புத்தகங்களில் படித்தால்தான் அவர்களின் பெயர்கள் நமக்கு தெரிகின்றன. அவர்களின் முகங்கள்கூட நினைவுக்கு வர மறுகின்றன. ஆனால் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில் எவர் நினைவிலும் படிந்துவிட்ட முகமும் பெயரும் என்றால் அது பிரபாகரன் என்ற பெயராகத்தான் இருக்கும். பள்ளிப் புத்தகங்களில் இல்லாத பிரபாகரன் என்ற பெயரை அறியாத குழந்தைகள் இன்றும் இல்லை. பிரபாகரன் என்ற பெயரும் அந்வ வீர முகமும் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும்.

இன்றைக்கு ஈழ மண்ணில் எங்கள் வீடுகளில் பிரபாகரன் அவர்களின் படத்தை வைத்திருக்க முடியாது. அந்தப் பெயரை நாங்கள் சத்தமாக உச்சரிக்கவும் முடியாது. பிரபாகரன் என்று பெயர் வைத்துக் கொண்ட பிள்ளைகளை கண்டாலே இராணுவத்தினர் அஞ்சி மிரள்வதை கண்டிருக்கிறேன். எங்கள் தெருக்களில், சுவர்களில் பிரபாகரனின் சிலையும் இல்லை. புகைப்படமும் இல்லை. ஆனால் பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இருதயங்கள் இல்லை என்பதே வரலாற்றில் பிரபாகரன் என்ற பெயருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது.

தலைவர் பிரபாகரன் பற்றிய நினைவுகளையும் வரலாற்றையும் இல்லாமல் செய்துவிடும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் கடுமையாக ஈடுபடுகின்றது. முகநூலில் அவரது புகைப்படத்தை பகிர்ந்தால், முகநூலில் இருந்து தடை செய்வோம் என்று எச்சரிக்கிறது முகநூல் நிர்வாகம். அதுபோல்  யூடியூப் சனலில்கூட தலைவர் பற்றிய பதிவுகளையும் படங்களையும் நீக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பல இலட்சம் ஈழ தமிழ் மக்களால் மாத்திரமின்றி உலக தமிழர்களாலும் நேசிக்கும் ஒரு தலைவன் படத்தை இருட்டடிப்பு செய்ய இவர்களுக்கு என்ன உரிமையுண்டு?

தமிழர்களை இல்லாமல் ஆக்குகின்ற இலங்கை அரசின் முயற்சிகளுக்கு இது ஒப்பானது. தமிழ் ஈழத்தை இல்லாமல் ஆக்குகின்ற முயற்சிகளுக்கு ஒப்பானது. தலைவர் பிரபாகரன் பற்றிய நினைவுகளையும் வரலாற்றையும் இல்லாமல் செய்ய முனைகின்ற செயல். மாறாக இந்த செயலானது முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தலைமுறைகளையும் பிரபாகரன் நோக்கித் திருப்பி விடுகின்றது. ஒரு இனத்தின் தலைவரை அம் மக்கள் கொண்டாடுவதை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் நினைவுரிமையில் பங்கம் ஏற்படுத்தக்கூடாது.

மக்களின் உரிமைக்காக தங்களை அர்ப்பணித்துப் போராடியவர்களை வரலாறு விடுவித்துக்கொள்ளும். அத்தகைய உன்னதமான தலைவர்களை வரலாறு போற்றுகின்ற பொதே அந்த விடுதலைப் போராட்டங்களும் அர்த்தம் பெறுகின்றன. நெல்சன் மண்டேலாவும் பிடல் காஸ்ரோவும் பயங்கரவாதிகளாக  சொல்லப்பட்டு பின்னர் உலக இதயங்களில் உன்னத போராளிகளாக நிலைத்தவர்கள். அவர்களைப் போல உலகின் எந்த ஜனாதிபதிகளும் பிரதமர்களும் நின்றதில்லை. அப்படியொரு அதியுன்னதமான போராளியே எம் தலைவர் பிரபாகரனும்.

இன்னும் சொல்லப் போனால், இவர்களை எல்லாம் கடந்து, ஈழ மக்களுக்காக துளியளவு கூட தன்னலமின்றி, வீரமும் தீரமும் கொண்டு போராடியவராகவும் உலகில் இதுவரை எவரும் கண்டிராத ஒரு ஒப்பற்ற தலைவராக பிரபாகரன் அவர்கள் தனித்துவம் பெறுகிறார். காலங்கள் கடந்தும் வரலாறு கடந்தும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லே எமக்காக போராடுகிறது. எமது அடையாளமும் காவலும் அந்தப் பெயர்தான்.

தீபச்செல்வன்

Previous Post

படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் சூர்யா

Next Post

வடமாகாணத்தில் 551 பேருக்கு 9 ‘ஏ’ தர சித்தி

Next Post
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

வடமாகாணத்தில் 551 பேருக்கு 9 'ஏ' தர சித்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures