சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதினை வென்ற நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்ன சுகம்’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் தனுஷ் – நித்யா மேனன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் அருண் விஜய் ,ஷாலினி பாண்டே, சத்யராஜ் , ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன சுகம் என்ன சுகம் உள்ள..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் தனுஷ் எழுத, பின்னணி பாடகர் தனுஷ் மற்றும் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இரண்டு அன்பான உள்ளங்களுக்கு இடையேயான அன்பு பகிர்தலை மையப்படுத்திய இந்தப் பாடல் மெல்லிசையின் பின்னணியில் உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து, வரவேற்பை பெற்று வருகிறது.