இயக்குநராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் அமீர், தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் ‘மாறன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா சாப்டர் 1’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மாறன்’. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இவர்களுடன் நடிகர் சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், நடிகை ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அமீர் ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகர் அமீர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார்.
இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தில் தனுஷும் ,இயக்குநர் அமீரும் மீண்டும் இணைந்திருப்பதால் ‘மாறன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.