கோலிவுட், பாலிவுட்டில் நடித்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த 16-ம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்த படத்தை கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இயக்குகிறார். தனுஷுடன் ஹாலிவுட் நடிகர்களான பெரனீஸ் பெஜோ, எரின் மொரயார்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பிரெஞ்சு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதால் இந்த படத்தின் கதை குறித்த விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜா (தனுஷ்) இந்தியாவில் இருக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன்! அதே நேரம் திறமையான மாயாஜால வித்தைக்காரன். நோயில் வாடும் இவனது அம்மா, அஜாவை ஒரு மர்மமான நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபிள் டவருக்கு அனுப்புகிறார். அங்கு ஒரு டாக்சி ஓட்டுனருடன் மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் பாரிஸின் மிகப் பெரிய ஒரு ஃபர்ணிச்சர் கடையில் மாட்டிக் கொள்கிறார். அங்கு மேரி என்பவள் அஜாவை நண்பனாக்கிக் கொள்கின்றாள். இவனுக்கு அவள் மீது காதல் வருகிறது. இந்நிலையில் அஜா அந்த கடையில் இருக்கும் ஒரு அலமாரிக்குள் மாட்டிக்கொள்ள, அந்த அலமாரி விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது! இதனை தொடர்ந்து நடக்கும் விறுவிறுப்பான, சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் படமாம்!