தசைநார் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் விமானத்தில் செல்ல கேரள தம்பதிக்கு சிங்கப்பூர் விமான நிறுவனம் அனுமதி மறுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த தம்பதி ஜார்ஜ் மற்றும் திவ்யா. இவர்கள் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள். 3 நாள் சுற்றுலா பயணமாக இவர்கள் குடும்பத்துடன் தாய்லாந்தில் உள்ள புகெட் நகருக்கு செல்ல முடிவு செய்து இருந்தனர். இதற்காக சிங்கப்பூர் விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்கூட் ஏர்லைன்சில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களுடன் 5 வயது மகளுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த சிறுமி ஒரு சிறப்பு குழந்தை. தசைநார்தொய்வு காரணமாக 8.5 கிலோ மட்டுமே உள்ளார்.
இது ஒரு வயது குழந்தையின் எடையாகும். எனவே, சிறுமியால் அவரது இருக்கையில் தனியாக அமர முடியாது. எனவே, அவளை திவ்யா தனது மார்போடு அணைத்து வைத்திருப்பார்.இந்த முறையும் விமானத்தில் ஏறியதும் அவ்வாறு செய்தார். ஆனால், விமான பணிப்பெண்கள் அதற்கு அனுமதி மறுத்தனர். அதையடுத்து, குழந்தையின் பாதுகாப்புக்கான இருக்கை பெல்ட் கேட்டனர். அதுவும் வழங்கப்படவில்லை. இதுபற்றி விமான கேப்டனிடம் புகார் தெரிவிக்க விரும்பினர். அவர் ஜார்ஜ் தம்பதியை சந்திக்க விரும்பவில்லை. இந்த இழுபறியால் சுமார் ஒரு மணி நேரம் விமானம் தாமதமானது. இறுதியாக ஜார்ஜ் தம்பதியினர் கேப்டனின் கேபினுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறப்பு குழந்தையை அதன் இருக்கையில்தான் அமர வைக்க வேண்டும். இல்லை என்றால் விமானத்தை விட்டு இறங்க வேண்டும் என்று கேப்டன் உத்தரவிட்டார். இதை ஏற்க ஜார்ஜ் தம்பதியினர் மறுத்தனர். இறுதியில் வேறுவழியின்றி சிறப்பு குழந்தை திவ்யாவின் அரவணைப்பில் புகெட் நகருக்கு சென்றாள்.
சுமார் ஒன்றே கால் மணி நேரம் இதனால் தாமதமாக விமானம் இயக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து திவ்யா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் வைரலாக பரவி உள்ளது.திவ்யா தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: எனது 5 வயது மகளால் தனியாக உட்கார முடியாது. அப்படி செய்தால் அவள் கீழே விழுந்து விடுவாள். இப்படி பலமுறை நடந்துள்ளது. எனவே, எங்களுடன் அவளை வைத்துதான் பயணம் செய்வோம். அவளுடன் பலமுறை விமானத்தில் சென்றுள்ளோம். எந்த விமான நிறுவனமும் அனுமதி மறுக்கவில்லை. மேலும், அவளுக்கான இருக்கை பெல்ட்டும் தருவார்கள். ஆனால், முதல்முறையாக ஸ்கூட் விமானத்தில் அவளை எங்களுடன் பயணிக்க கேப்டன் அனுமதி மறுத்தார். அவளது இருக்கையில் அமர்ந்தால்தான் விமானத்தை இயக்க முடியும் என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திவ்யாவுக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்

