ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீ ல.சு. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்தவின் விருப்பின் பேரில் ஒருவரையே எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.க.யின் 16 பேர் கொண்ட குழு, மஹிந்த ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் போதே பிரதமராக்கி ஸ்ரீ ல.சு.க.யின் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்து வருகின்றது.
பசில் ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு, எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தமது மலர் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதாகவுள்ளது.
தற்பொழுது அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ ல.சு.க.யின் 43 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேருடன் தனிவேட்பாளருக்காக போட்டியிட களமிறங்குமாக இருந்தால், அது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மஹிந்த குழுவுக்குமே சாதகமாக அமையப் போகின்றது என்பது அரசியல் அவதானிகள் பலரும் தெரிவித்து வரும் கருத்தாகவுள்ளது.