முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை டெல்லி செல்கிறார். அடுத்த நாள் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பாஜ அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அதைத்தொடர்ந்து மத்திய பாஜகவின் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்க தொடங்கினர்.
இதனால், தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்ைட அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பதால், பாஜவுடன் கூட்டணி என்று அர்த்தம் இல்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிதான் முடிவு செய்யப்படும் என்று முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அறிவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசை மிரட்டும் வகையில் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள், அரசு பணிகளை டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை சோதனை, சிபிஐ சோதனை என அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஒரு யுக்திதான் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரிய அளவில் வருமான வரி சோதனை, சிபிஐ சோதனை நடத்தினாலும், யாரையும் கைது செய்யும் நடவடிக்கை இல்லை.
இதனால், இது பாஜகவின் ஒரு மிரட்டல் போக்கே என்று அதிமுக தலைவர்களே வெளிப்படையாக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள். இந்நிலையில், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் சந்தித்து பேசினார். பின்னர் நேற்று இரவு முதல்வர் எடப்பாடியும் கவர்னரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்தே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கவர்னர், மத்திய அமைச்சர் சந்திப்பை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர பயணமாக நாளை மாலை டெல்லி செல்கிறார். 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ இடையே கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து மட்டுமே பேசப்படும் என்றே அதிமுக மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசியலில் தற்போது ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க பலரும் முயற்சி செய்து வருகிறார்.
டி. டி. வி. தினகரன் அனைத்து பக்கங்களில் இருந்தும் ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதில் இருந்து சமாளிக்க பிரதமர் மோடியின் உதவி தற்போது தேவைப்படுகிறது.
அடுத்து, தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலுக்கு திமுக தற்போது தயாராகி விட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் திமுகவுடன் மிக நெருக்கமாக உள்ளனர். இந்த நெருக்கம் தேர்தல் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
ஆனால், அதிமுகவில் அப்படி ஒரு நிலை இல்லை. எங்கள் உள்கட்சி பிரச்னை தற்போது பூதாகரமாகி வருகிறது.
இதை சமாளிக்க வேண்டும். அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
இந்த நிலையில், நாளை மறுதினம் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த சந்திப்பின்போது நிச்சயமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும்.
முன்னதாக, தமிழக அரசுக்கு மத்திய அரசால் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்தும் முதல்வர் அப்போது விளக்கி கூறுவார். இதுதவிர, தமிழகத்தில் மதுரை மாவட்டம் தொப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தாலும், அதற்கான நிதியை விரைவில் ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார்.
அடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் ஜெயலலிதா ஆர்வமாக இருந்தார். அதே நிலையைதான் தற்போதைய எடப்பாடி தலைமையிலான அரசும் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது. இதுகுறித்து முதல்வர் பிரதமரிடம் நேரில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.
அப்போது சீட் ஒதுக்கீடு, தேர்தல் செலவு குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்றார். நாளை மறுதினம் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச உள்ளார் என்று அறிவித்தாலும், அதற்கான நேரம் குறித்த இறுதி முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கான பணிகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
.

