குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் டெல்லி பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகள் வன்முறைக்கு இறையாகின.
இந்தச் சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட இதுவரையில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய குடியிருப்புகள் பெருமளவில் வன்முறைக்கு இறையாகின.
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்கள் அமைதி வழியில் கூடி போராடுவதை மதிக்கவேண்டும்.
அவர்களைப் பாதுகாக்க வேண்டும். வன்முறைச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எல்லா தரப்பினரும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும், வன்முறையிலிருந்து விலகி இருக்கவேண்டும். இதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதச் சுதந்திரம் குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து வலியுறுத்தப்படும். மதச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் அடிப்படையான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கோலின் ஆல்ரெட், ‘சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதிலும், எல்லாரையும் இணைத்துக் கொள்வதிலும்தான் ஜனநாயகம் வலிமையாகிறது.
உலகின் மிகப் பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதும் அவர்களுக்கு எதிரான வன்முறையின் காரணமாக இந்தியாவின் மதிப்பு பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

