டுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
குறிப்பாக டுவிட்டர் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டுவிட்டருக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி பதவி காலியான நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியை மஸ்க் ஈடுபட்டார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையிலான நபரை தேடும் பணியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இதன்படி, அவர் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால், அது ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கி டுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி என மஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறார். மற்ற தலைமை நிறைவேற்று அதிகாரிகளை விட சிறந்த தலைமை நிறைவேற்று அதிகாரியாக தனது பிளாக்கி இருக்கும் என மஸ்க் உணருகிறார்.
இதுபற்றி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள மஸ்க், அதில்,
தலைமை நிறைவேற்று அதிகாரிநாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. அதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் தலைமை நிறைவேற்று அதிகாரி என்று எழுதியபடியும் காணப்படுகிறது. அதற்கு முன்னாள் மேஜையில் சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதன் மேல், கையெழுத்திற்கு பதிலாக பிளாக்கியின் கால் தடங்களும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளன. ஏதேனும் அவசர இ-மெயில் அனுப்ப வேண்டும் என பிளாக்கி விரும்பினால் அதற்கு உதவுவதற்கு ஏற்ற வகையில், டுவிட்டர் லோகோவுடன் கூடிய சிறிய லேப்டாப் ஒன்றும் பிளாக்கியின் முன்னால் உள்ளது. இந்த புகைப்படம் வெளியிட்டு, டுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை பார்த்து ஆச்சரியம் ஏற்படுகிறது என மஸ்க் தெரிவித்துள்ளார்.