அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்டு வரும் மைக்கேல் டீ கோஹன், கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்ட்ரோமி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானபின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலானியா டிரம்ப்புக்கு அவரது மகன் பேரான் 2006இல் பிறந்த சில நாட்களில் இரு்து டிரம்ப்புடன் தமக்குப் பாலியல் உறவு இருப்பதாக 2011இல் ஒரு பேட்டியில் டேனியல்ஸ் கூறியிருந்தார். அதை டிரம்ப் உறுதியாக மறுப்பதாக வழக்கறிஞர் மைக்கேல் டீ கோஹன் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
“டிரம்ப் அமைப்புக்கோ, டிரம்பின் பிரசார குழுவுக்கோ ஸ்டெப்பைன் கிரோகேரி கிளிப்ஃபோர்டு (ஸ்ட்ரோமி டேனியல்ஸ்-இன் இயற்பெயர்) எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கியதில் தொடர்பில்லை,” என்று நியூ யார்க் டைம்ஸ் நாளிதழிடம் அவர் கூறியுள்ளார்.
“கிளிப்ஃபோர்டுக்கு தனிப்பட்ட முறையில் பணம் வழங்கப்பட்டது சட்டபூர்வமானது. அது தேர்தல் பிரசார செலவாகவோ, பிரசாரத்துக்கு வழங்கப்பட்ட நன்கொடையாகவோ கருதமுடியாது,” என்று கோஹன் தெரிவித்துள்ளார்.
அதை டிரம்பின் பிரசார செலவுக்கு வழங்கப்பட்ட தொகையாக கருதலாம் என்று ஒரு கண்காணிப்புக் குழு அமெரிக்க தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து, அந்த ஆணையத்துக்கு அளித்த விளக்கத்திலும் இதையே தாம் கூறியதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல் நடந்த 2016இல் டிரம்ப் உடனான உறவு குறித்து பேச டேனியல்ஸ் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டதால் அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்ற செய்தி கடந்த ஜனவரி மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியானதால் இந்த விவகாரம் மீண்டும் விவாதத்துக்கு உள்ளானது.
டிரம்ப் உடன் டேனியல்ஸ்க்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று அந்த நடிகையின் செய்தித்தொடர்பாளர் ஜனவரி 30 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால், அந்த மறுப்புச் செய்தியில் இருந்த டேனியல்ஸின் கையெழுத்து அதற்கு முன்பு அவர் ஜனவரி 10 அன்று வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் இருக்கும் அவரது கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை டேனியல்ஸ் உள்பட பலரும் கவனித்தனர்.
அதன் பின்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டாலும் டிரம்ப் உடனான தொடர்பு குறித்த நேரடிக் கேள்விகளுக்கு டேனியல்ஸ் பதில் அளிக்காமல் தவிர்த்து வந்தார்.
ஜிம்மி கெம்மலின் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தகவல் வெளியிடாமல் இருக்க ஒப்பந்தம் எதுவும் கையெழுதிட்டீர்களா அல்லது ‘லொனால்டு லம்ப்’ எனும் பெயரை ஒத்த நபருடன் பாலுறவு கொண்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.