அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப், டிவி தொகுப்பாளருடன் காதல் வயப்பட்டிருப்பது அவரது மனைவியால் உறுதியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்ப். இவரது மனைவி வனேசா டிரம்ப். இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஜூனியர் டிரம்ப்பை வனேசா பிரிந்து 9 மாதமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ‘பாக்ஸ் டிவி’யின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிம்பர்ளி குயல்போயலியை ஜூனியர் டிரம்ப் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஜூனியர் டிரம்ப் கடும் கண்டனத்துடன் அதிருப்தி தெரிவித்து டிவிட் செய்தார்.இதற்கு ரீடிவிட் போட்ட அவரது மனைவி வனேசா, ‘டானுடன் (ஜூனியர் டிரம்ப்) காதல் கொண்டதற்காக அந்த பெண் மீது எளிதாக இன்னும் பலரும் தாக்குதல் தொடுப்பார்கள். நானும் என் கணவரும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், முடிவுக்கும் மதிப்பளித்து 9 மாதமாக பிரிந்து வாழ்கிறோம்’ என கூறியுள்ளார். ஜூனியர் டிரம்ப்பின் மனைவியே டேட்டிங் நடந்திருப்பதை உறுதிபடுத்தி இருப்பது பரபரப்பாகி உள்ளது.

