தற்போது இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின்கீழ் டிஜிட்டல் சேவை வரியை அறவிடுவது குறித்து தாம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்புடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பற்றிய பரிந்துரைகள் எதனையும் தாம் இலங்கையிடம் முன்வைக்கவில்லை என்றும் நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
‘வருமான உட்பாய்ச்சல் இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்தின் முக்கிய கூறாகும். எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான முதலாவது மதிப்பீட்டின்போது, மேலதிக வருமானத்தை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளது.
இதன்போது டிஜிட்டல் சேவை வரியை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அதன்மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்தும் ஆராயப்படக்கூடும்’ என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் தாம் இலங்கை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.