இலங்கையில் சீன செயலிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
சீன செயலிகள் தொடர்பான உலகளாவிய செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களைக் காரணம் காட்டி, டிக்டொக் உள்ளிட்ட பல சீன செயலிகளை அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அண்மையில் தடை செய்திருந்தது.
இது தொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவிக்கையில், எமது ஆணைக்குழு உலகளாவிய நிலைமைகளை கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு செயலிகளையும் தனித்தனியாக கவனிப்பதற்கு வழியில்லை எனினும், இது தொடர்பில் உலகலாவிய ரீதியில் கையாளப்படும் நடைமுறைகளை பிற்பற்றுதாகக் கூறினார்.
இலங்கையில் இதுவரையில் சீன செயலிகள் குறித்து எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. குறிப்பாக, டிக்டொக் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.
இவ்வகையான செயலிகளால் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட நேரிட்டால் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சீன செயலிகளுக்கு எதிராக பல நாடுகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் இந்த செயலிகள் குறித்து எவ்வித அச்சுறுத்தலையும் இலங்கை அடையாளம் காணும் வரையில் அவ்வாறான தடை இலங்கைக்கு அவசியமன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

