இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஹட்டன் நெஷனல் வங்கி (HNB), விமானப்படை ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் கடந்த வருடமும் இறுதிப் போட்டியில் பங்குபற்றியதுடன் ஹட்டன் நெஷனல் வங்கி மேலதிக நேரத்தில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் (49 – 47) வெற்றிபெற்று சம்பியனாகியிருந்தது.
இந்த வருட இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக டொரிங்டன் சதுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்ற ஒரு அரை இறுதிப் போட்டியில் கடற்படை அணியை எதிர்த்தாடிய ஹட்டன் நெஷனல் வங்கி 39 – 27 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்னாள் மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனைகளைக் கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி முதல் 3 ஆட்டநேர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றது.
போட்டியின் முதல் 2 ஆட்டநேர பகுதிகளை 12 – 5, 8 – 7 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிக்கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி இடைவேளையின்போது 20 – 12 கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
3ஆவது ஆட்டநேர பகுதியை 11 – 5 என தனதாக்கிக்கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி கடைசி ஆட்டநேர பகுதிகளில் மாற்று விராங்கனைகளைப் பயன்படுத்தியதால் 8 – 10 என பின்னிலையில் இருந்தது. எனினும் ஒட்டுமொத்த நிலையில் 39 – 27 என்ற கோல்கள் கணக்கில் ஹட்டன் நெஷனல் வங்கி வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறியது.
விமானப்படையிடம் இராணுவம் பணிந்தது
இராணுவத்தை மற்றைய அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடிய விமானப்படை 30 – 24 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
அப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் 7 – 5 என்ற கோல்கள் கணக்கில் இராணுவம் முன்னிலையில் இருந்தபோதிலும் 2ஆவது ஆட்டநேர பகுதியை 7 – 5 என விமானப்படை தனதாக்கிக்கொண்டது. இதன் காரணமாக இடைவேளையின்போது இரண்டு அணிகளும் 12 – 12 என சமநிலையில் இருந்தன.
இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய விமானப்படை 11 – 4 என 3ஆவது ஆட்டநேர பகுதியை தனதாக்கி 23 – 16 என முன்னிலை அடைந்தது.
எனினும் கடைசி ஆட்டநேர பகுதியில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாட இராணுவம் அப் பகுதியை 8 – 7 என தனதாக்கியது. ஆனால், ஒட்டுமொத்த நிலையில் விமானப்படை 30 – 24 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
ஹட்டன் நெஷனல் வங்கிக்கும் விமானப்படைக்கும் இடையிலான இறுதிப் போட்டி டொரிங்டன் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும். அதற்கு முன்னர் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இராணுவமும் கடற்படையும் மோதும்.
தேசிய வலைபந்தாட்டப் போட்டிக்கு டயலொன் ஆசிஆட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகிறது.