வைரமுத்து மிகச் சிறந்த கவிஞர் தான்,ஆனால் அவரது கவிதை மனமும், உண்மையான குணமும் பெரும் முரண்பாடு கொண்டவை.மாராட்டியத்தில் பொது குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்தவர், அதோடு நிற்க்காமல்,முன்பு குளிக்கவில்லையே என்று தண்டித்தவர்கள்,இன்று குளித்ததற்காக தண்டிக்கிறார்கள்…என பதிவிட்டுள்ளார்.
அப்படியானால்,முன்பு தலித்களுக்கு பொது குளத்தில் குளிக்க அனுமதி இருந்தது என சொல்லவருகிறாரா?எனில், வைரமுத்து வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று தான் அர்த்தம்.ஆனால் அவருக்கு வரலாறு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.வார்த்தை ஜாலத்திற்காகவோ ,பொறுப்பின்றியோ அவர்
இவ்வாறு உளறுவது முதல் முறையல்ல.
சென்ற வாரம் ஜெயகாந்தன் பற்றிய கட்டுரை உரையை கேட்க ஆர்வமுடன் சென்றேன்.முந்தைய அவரது பல உரைகளை போல இது அவ்வளவு சிறப்பாக இல்லை.இதில் என்னைப் போன்ற ஜெ கே வின் தீவிர வாசகர்களுக்கு ஒரளவு வருத்தம்.அதை விட அந்த விழா ஜெயகாந்தனை பற்றி பேசுவற்காகவா? அல்லது வைரமுத்து தன்னைப் பற்றி பேசுவற்க்காக ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற அளவுக்கு நிகழ்ச்சியை அவர் வடிவமைத்திருந்தார்.
வரவேற்புரையாற்றிய பெண்மணியாகட்டும்,சிவசங்கரியாகட்டும் வைரமுத்துவை மிகையாக புகழ்ந்து தள்ளிவிட்டனர்.வரவேற்புரையை அவரே எழுதி கொடுத்திருக்க கூடும் என்பதே அதை கேட்ட பலரின் அனுமானமாக இருந்தது.ஜெயகாந்தனை பற்றிய நிகழ்வில், இது வரை வைரமுத்து யார்,யாருக்கெல்லாம்,எதுஎதுக்கெல்லாம் பண உதவி செய்துள்ளார் என்ற பட்டியல் ஏன் வாசிக்கப் பட வேண்டும்? அதற்கும் ஒருபடி மேலே போய் ஜெயகாந்தனுக்கு அவர் செய்த உதவிகளையும் தன் உரையில் வெளிப்படுத்த அவர் தயங்கவே இல்லை.அதுவும் ஜெ கே யை ஓட்டலுக்கு கூட்டிச் சென்று சாப்பிட வைத்ததை கூட சொல்ல வேண்டுமா?
ஒரு கவிஞன் தன் கவிதையை விட அதிகமாக மக்களால் மிகவும் நேசித்து கொண்டாடப்பட்டான் என்றால்,அது கவிஞர் கண்ணதாசனைக் குறிக்கும்.ஒரு கவிஞன் மிகச் சிறந்த கவிதைகள் படைத்தும் மக்களால் விரும்ப முடியாதவனாக இருக்கிறான் என்றால் அது வைரமுத்துவைத் தான் குறிக்கும்.

