ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கைலாசா என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை தான் நிராகரிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நித்தியானந்தா, இந்தியாவை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். பின்னர் அவர் கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கியதாக கூறினார்.
இந்நிலையில், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த 22, 24 ஆம் திகதிகளில் நடைபெற்ற, ஐநாவின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டங்களில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக சில பெண்கள் கலந்துகொண்டனர்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒவ் கைலாசா எனும் கைலாசா குடியரசின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் ,இவர்கள் கூறிக்கொண்டனர். இவர்களில் விஜயப்பிரியா நித்தியானந்தா என்பவர் தன்னை கைலாசாவுக்கான ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி என கூறிக்கொண்டு உரையாற்றினார்.
கைலாசா என்பது இந்துக்களுக்கான முதல் இறையாண்மை நாடு. இந்துக்களின் உயரிய தலைவர் நித்தியானந்த பரமசிவத்தால் நிறுவப்பட்டது கைலாசா.’ என்று தெரிவித்தார்.
‘இந்து மதத்தின் பழமையான பாரம்பரியம் மற்றும் வாழ்க்கைமுறையை மீட்டெடுப்பதற்காக நித்தியானந்தா துன்புறுத்தல்களை அனுபவிக்கிறார். அவர் போதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; தான் பிறந்த நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளார்,’ எனும் அப்பெண் கூறினார்.
இதையடுத்து, கைலாசாவை ஐநா அங்கீகரித்துவிட்டது போன்று சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியாகின.
ஆனால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது சில கூட்டங்களில் தொண்டர் அமைப்புகளுக்கும் பேச அனுமதிக்கிறது. இதை பயன்படுத்தியே நித்தியானாந்த சார்பானவர்கள் இக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜெனீவாவில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் ஒரு கற்பனையான நாட்டின் பிரதிநிதி பதிவு செய்த வார்த்தைகளை நிராகரிப்பதாக ஐநா கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும் கைலாசா பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா அதிகாரி பிபிசிக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒவ்; கைலாசா (யுஎஸ்கே) பிரதிநிதிகள் பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் இரண்டு ஐநா கூட்டங்களில் கலந்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார்.
முதலாவது கூட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CESCR) பெப்ரவரி 22ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்ததாகும். அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டம், பேப்ரவரி 24ஆம் திகதி பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு ((CESCR) நடத்திய நிலையான வளர்ச்சி குறித்ததாகும்.
‘பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்’ என்று இந்த இரண்டு குழுக்களையும் மேற்பார்வையிடும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.
CEDAW கூட்டத்தில் யுஎஸ்கே வழங்கிய எழுத்துபூர்வ அறிக்கை ‘பொது விவாத தலைப்புக்கு பொருத்தமற்றது’ என்பதால் அவர்களின் கருத்துகள், அறிக்கையில் சேர்க்கப்படாது என்று குவோக் மேலும் கூறினார்.
இரண்டாவது கலந்துரையாடலில் யுஎஸ்கே பிரதிநிதி ஒருவரின் கூற்று, நிகழ்ச்சிக்கும் தலைப்புக்கும் எட்டாத வகையில் இருந்ததால் அதுவும் கவனத்தில் கொள்ளப்படாது என்றும் குவோக் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.