‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘செல்ஃபி’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மணிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘செல்ஃபி’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிகில்’ பட புகழ் நடிகை வர்ஷா பொல்லாமா நடித்திருக்கிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், குணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் திகதியன்று இப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘ஸ்டைலிஷ் இயக்குநர்’ மற்றும் நடிகரான கௌதம் வாசுதேவ் மேனனும், ஜீ. வி. பிரகாஷ் குமாரும் முதன்முறையாக இணைந்து நடித்திருப்பதாலும், தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக நடைபெறும் முறைகேடுகளை மையப்படுத்தி இருப்பதாலும், ‘செல்ஃபி’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.