இலங்கையில் உள் நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஹிஜாத் குழு எனும் பெயரில் கடும்போக்கு இஸ்லாமிய குழு இயங்கியதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலீப் திவாகர டி சில்வா சாட்சியமளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சாட்சி விசாரணைகள் நேற்று வியாழக்கிழமை 4 ஆவது நாளாக நடைபெற்றது.
குறித்த குழுவினர் ஆயுதம் ஏந்தி இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை தாக்காத போதும், அவர்களது நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் சாதாரண முஸ்லிம்களிடமிருந்து வேறு பட்டதாக காணப்பட்டது எனவும் அவர் மேலும் இதன்போது கூறியுள்ளார்.

