ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மதகுருமார்களிடம் பணம் அறவிடுவதை நிறுத்துமாறு வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு வருகை தரும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் அதற்கென அதிக பணம் செலவாகும் என வைத்தியசாலை அதிகாரிகள் அனுமானித்திருந்தனர்.
இதன்படி வைத்தியசாலை மதவழிபாட்டு தளத்தில் தங்கி சிகிச்சை பெறுகின்ற மதகுருமார்களுக்கு மாத்திரம் குறித்த சேவையை வழங்குவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.
இதேவேளை, குறித்த தீர்மானத்தினை நீக்கி வைத்தியசாலைக்கு வரும் அனைத்து மதகுருமார்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலை நிர்வாக தலைவர் அதுல கஹதலியனகேவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

