ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜப்பானிய சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் அந்நாட்டில் 799,728 குழந்தைகள் பிறந்துள்ளன.
இது ஜப்பானில் 1899 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு வருடத்தில் பதிவாகிய மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையாகும். வருடாந்த பிறப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைவிட குறைந்தமை இதுவே முதல் தடவையாகும்.
2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் பிறப்பு எண்ணிக்கை 5.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கடந்த 40 வருடங்களில் ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு அரைவாசியாக குறைவடைந்துள்ளது. 1982 ஆம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்திருந்தன.
ஜப்பானில் கடந்த ஒரு தசாப்தகாலமாக வருடாந்த பிறப்பு எண்ணிக்கையைவிட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் கடந்த வருடம் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. கடந்த வரும் 1.58 லட்சம் பேர் இறந்திருந்தனர். இது முந்தைய வருடத்தைவிட 8.9 சதவீத அதிகரிப்பாகும்.
தற்போது வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊழியர்படை மற்றும் வரியிறுப்பாளர்களின் எண்ணக்கை குறைவடையும் நிலையில், ஓய்வூதியம், சுகாதாரம் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
சிறார்கள் தொடர்பான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 2 மடங்காக அதிகரிக்க அரசாங்கம்; விரும்புவதாக ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.
எனினும், பணத்தினால் மாத்திரம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் பல சமூக விடயங்களும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவ அதிகரிப்பு, குறைந்த இடவசதி, நகரங்களில் சிறுவர் பராமரிப்பு வசதிகள் குறைவு, நகரப்புற தம்பதிகளின் குழந்தை வளர்ப்புக்கு உதவக்கூடிய குடும்ப உறவினர்கள் வெகு தொலைவில் உள்ளமை ஆகியனவும் பிறப்பு வீதம் குறைவடைவதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.