ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் உள் வீட்டு மோதல் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் வைத்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நான் உட்பட எமது கட்சியும் மகிழ்ச்சியில் உள்ளோம்.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் உள்ளது.
அப்படி நடந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம்.
இப்படியான நிலைமை உருவாகினால், கோத்தபாய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.
கூட்டணி அமைக்க போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா அல்லது மைத்திரிபால சிறிசேனவா என்பது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

